கூட்டுறவு சங்க பணியாளர்கள் தொடர் விடுப்பு போராட்டம்


கூட்டுறவு சங்க பணியாளர்கள் தொடர் விடுப்பு போராட்டம்
x

கூட்டுறவு சங்க பணியாளர்கள் தொடர் விடுப்பு போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

போராட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்நோக்கு சேவை மையம், உட்கட்டமைப்பு நிதி (எம்.எஸ்.சி. மற்றும் ஏ.ஐ.எப்.) திட்டத்தின் கீழ் சங்கங்கள் தங்களுக்கு பயன்படுகிறதோ?, இல்லையோ? டிராக்டர், நெற்கதிர் அறுக்கும் எந்திரம், கரும்பு வெட்டும் எந்திரம், பறக்கும் மருந்து தெளிப்பான் (டிரோன்), லாரிகள், சிறு சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவற்றை ஒன்று முதல் 3 எண்ணிக்கை வரை கட்டாயமாக வாங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் வற்புறுத்தி வாங்க வைக்கின்றனர்.

அதேபோல் கூட்டுறவு சங்க வளாகங்களில் தேவை இருக்கிறதோ? இல்லையோ? கிட்டங்கிகளை கட்டியே ஆக வேண்டும் என்று நிர்பந்தப்படுத்துகின்றனர். இதனால் பல சங்கங்கள் நஷ்டத்தில் செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் கூட்டுறவு பணியாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

சங்கங்கள் மூடல்

எனவே இதனை கைவிட வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 54 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் தங்களது சங்கங்களை இழுத்து மூடி பூட்டினர். பின்னர் சங்கங்களில் கொள்முதல் செய்யப்பட்ட கருவிகளான 47 டிராக்டர்கள், 21 சரக்கு வாகனங்களின் சாவிகளை பெரம்பலூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் சரக துணை பதிவாளர் இளஞ்செல்வியிடம் ஒப்படைத்தனர். மேலும் தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படும் வரை தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமையில் 57 பெண் ஊழியர்கள் உள்பட மொத்தம் 180 பேர் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன், வினியோகம், பண பரிவர்த்தனை, விவசாய கடன் வழங்குதல் விவசாய கருவிகள்-உபகரணங்கள் வாடகைக்கு வழங்குதல், உரவினியோகம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.


Next Story