கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் துரைக்கண்ணு முன்னிலை வகித்தார். திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு சங்க பணியாளர்கள் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது, பல்நோக்கு சேவை மையம், உட்கட்டமைப்பு நிதி (எம்.எஸ்.சி. மற்றும் ஏ.ஐ.எப்.) திட்டத்தை கட்டாயப்படுத்தி அமல்படுத்துவதை கைவிட வேண்டும். ஊதிய ஒப்பந்தம் குறித்து அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கையை விரைவில் பெற்று ஊதிய உயர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும். காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். முன்னதாக திருச்சி மாவட்ட செயலாளர் காமராஜ் வரவேற்றார். முடிவில் மாவட்ட தலைவர் ஜெகநாதன் நன்றி கூறினார்.
ஏற்கனவே இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன், வினியோகம், பணப்பரிவர்த்தனை, விவசாய கடன் வழங்குதல், விவசாய கருவிகள்-உபகரணங்களை வாடகைக்கு வழங்குதல், உர வினியோகம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.