நிலக்கரி சுரங்க விவகாரம்: நானும் டெல்டாகாரன் தான், நிச்சயம் இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி


நிலக்கரி சுரங்க விவகாரம்: நானும் டெல்டாகாரன் தான், நிச்சயம் இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
x
தினத்தந்தி 5 April 2023 12:46 PM IST (Updated: 5 April 2023 4:06 PM IST)
t-max-icont-min-icon

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

சென்னை,

நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நிலக்கரி எடுப்பது குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.காமராஜ் கூறினார்.

நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. நிலக்கரி சுரங்கம் டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை ஏலம் விடும் செயல். டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பு சட்டத்திற்கு புறம்பானது என்று தி.மு.க. எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா கூறினார்.

நிலக்கரி சுரங்கம் அமைக்கும் டெண்டரை உடனடியாக நிறுத்த மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசுக்கு எதிராக உள்ளது. மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் செய்வது கண்டனத்துக்குரியது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் புதிய திட்டம் செயல்படுத்தக்கூடாது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை கூறினார்.

இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்-அமைச்சர் பதிலளித்து பேசியதாவது:-

நான் நீண்ட நேரம் அதுகுறித்து விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த செய்தி வந்தபோது நீங்கள் எல்லாம் எப்படி அதிர்ச்சிக்கு ஆளானீர்களோ, அதேபோல் நானும் அதிர்ச்சிக்கு ஆளானேன். செய்தியை பார்த்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி, அதற்கு பிறகு உடனே பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.

டெல்லியில் நாடாளுமன்ற கூட்டம் நடந்துகொண்டு இருப்பதால் அந்த கடிதத்தின் நகலை திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு அவர்களுக்கு அனுப்பி உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து நமது எதிர்ப்பையும், பிரதமருக்கு எழுதிய கடிதத்தை வழங்க வேண்டும் என்றும் நான் உத்தரவிட்டேன். அவரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

தொழிற்துறை அமைச்சர் சொல்வதைபோல் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் அவர்கள், வெளியூரில் இருக்கும் காரணத்தால் அவரை நேரடியாக சந்திக்க முடியவில்லை. எனவே டிஆர் பாலு அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி இருக்கிறார். அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் அனுப்பிய கடிதத்திற்கு நாங்கள் மதிப்பளிப்போம். கவலைப்பட வேண்டாம் என்ற ஒரு உத்தரவாதத்தை மத்திய அமைச்சர் அளித்ததாக டிஆர் பாலு அவர்களிடம் செய்தியை சொல்லி இருக்கிறார்கள்.

ஆகவே, நிச்சயமாக சொல்கிறேன் முதலமைச்சராக மட்டுமல்ல.. நானும் டெல்டாகாரன். எனவே இதில் உறுதியாக நான் இருப்பேன். நீங்கள் எல்லாம் எப்படி இதில் உறுதியாக இருக்கிறீர்களோ அதைவிட நான் உறுதியாக இருப்பேன். எந்த காரணத்தை கொண்டும் நிச்சயமாக நமது தமிழ்நாடு அரசு இதற்கு அனுமதி அளிக்காது." என்றார்.

1 More update

Next Story