அழிவின் விளிம்பில் தென்னை விவசாயம்


அழிவின் விளிம்பில் தென்னை விவசாயம்
x
தினத்தந்தி 27 Jun 2023 9:14 PM IST (Updated: 28 Jun 2023 2:27 PM IST)
t-max-icont-min-icon

அழிந்து வரும் தென்னை விவசாயத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

திருப்பூர்

ஆண்டுக்கு 8 முறை வருமானம்

நிலைத்து நின்று ஆண்டுகள் பல கடந்து நிரந்தர வருமானத்தை அளித்து எண்ணற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி வருகிறது தென்னை விவசாயம். ஆண்டுக்கு 8 முறை விவசாயிகளுக்கு நிலையான வருமானத்தை அளிப்பதுடன் தேங்காய் போடுதல், சுமத்தல், உரித்தல், மட்டை, ஓலை, சீமாறு, நார் உற்பத்தி, தேங்காய் எண்ணெய், புண்ணாக்கு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மூலமாக ஏராளமான பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறது.

சீரும் சிறப்பும் தலைமுறைகள் பலகண்ட தென்னை விவசாயம் இன்று குற்றுயிரும் குலையுயிருமாக உள்ளது. தேங்காய்க்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் மரங்களை பராமரிப்பு செய்வதிலும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. தேங்காய் விலை மட்டுமே குறைந்து உள்ளதே தவிர அதற்கான இடுபொருட்கள் விலை, ஆட்கள் கூலி உள்ளிட்டவை அதிகரித்தே உள்ளது.

அழிந்து வரும் தென்னை விவசாயம்

குறைவான வருமானத்தைக் கொண்டு அபரிவிதமான செலவை எதிர் நோக்கி வாழ்க்கை நடத்த முடியாத சூழல் விவசாயிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஒரு சில விவசாயிகள் தொழிலையே கைவிடும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அழிந்து வருகின்ற தென்னை விவசாயத்தை காப்பாற்றுவதற்கும் சம்பந்தப்பட்ட துறையினர், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஒற்றை தென்னை மரத்தின் அழிவு நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பது யாரும் அறிவதில்லை.

சிறுக... சிறுக... விவசாயம் அழிந்து வருகின்ற சூழலில் நிலைப் பயிரான தென்னை சாகுபடியும் அழிவை நோக்கி செல்வதால் விவசாய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பல்வேறு வேலைகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால் அடுத்த தலைமுறை விவசாயி உருவாவதும் ஆரம்ப கட்டத்திலேயே தடுக்கப்படுகிறது. இனி வருகின்ற ஒவ்வொரு தலைமுறையும் ஆரோக்கியமான உடல் நலம் பெற்று வாழ வேண்டும் என்றால் விவசாயியின் பங்கும் முக்கியமானதாகும்.

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்

விவசாயி இல்லாத உலகமும் இல்லை தென்னை இல்லாத வாழ்க்கையும் இல்லை என்பதை உணர்ந்து அழிவை நோக்கி சென்று கொண்டுள்ள தென்னை விவசாயத்தை மீட்டு எடுப்பதற்கு அரசு முன்வர வேண்டும். இளநீர், தேங்காய் போன்றவற்றின் விலையை உயர்த்தி விவசாயத்தையும் விவசாயியின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டியது கடமையாகும்.

அதற்கு முதல் கட்டமாக விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலமாக தேங்காய் எண்ணெய் விற்பதற்கும் அரசு முன்வர வேண்டும். நாள்தோறும் போராட்டத்தை சந்தித்து வருகின்ற விவசாயிகள் உழுவதை ஒரு சுற்று நிறுத்தினால் அதன் தாக்கம் பல ஆண்டுகளுக்கு உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தி விடும். இனியாவது கண்முன்னே உள்ள அழிவை தடுத்து நிறுத்தி விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.


Next Story