ஆடி பிறந்தாச்சி...தேங்காய் சுட்டாச்சி...


ஆடி பிறந்தாச்சி...தேங்காய் சுட்டாச்சி...
x
தினத்தந்தி 18 July 2023 11:08 PM IST (Updated: 19 July 2023 2:32 PM IST)
t-max-icont-min-icon

கொங்கு மண்டலத்தில் ஆடி மாதத்தின் தொடக்கத்தில் தேங்காய் சுடும் நூதன வழிபாட்டு முறை உள்ளது.

திருப்பூர்

பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு...

தென்னையைப் பெற்றால் இளநீரு...

என்பது பழமொழி.

விலையின்மையால் இன்று தென்னை

விவசாயிகளின் நிலையும் கண்ணீருடன் கழிகிறது. ஆனால் தென்னை சார்ந்த

உணவுப்பொருட்களின் மகத்துவத்தை

உணர்த்தும் வகையிலான

விழாக்கள் கொங்கு மண்டலத்தில்

கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாபாரத போர்

ஆடி மாதம் பிறந்து விட்டால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் எதுவும் வீட்டில் நடத்துவதில்லை. அதேநேரத்தில் அம்மன் கோவில்கள் திருவிழாக்கோலம் பூண்டு விடும். பெண் தெய்வங்களுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடி மாதத்துக்கு இன்னும் பல சிறப்புகளும் உண்டு. தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலான யுத்தம் எனப்படும் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடைபெற்ற மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1-ந்தேதி தொடங்கி ஆடி 18-ந்தேதி வரை 18 நாட்கள் நடைபெற்றது. இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என வேண்டிய பொதுமக்கள் தேங்காய் சுட்டு இஷ்ட தெய்வத்துக்கு வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கொங்கு மண்டலத்தில் ஆடி மாதத்தின் தொடக்கத்தில் தேங்காய் சுடும் நூதன வழிபாட்டு முறை உள்ளது. இது வெறும் வழிபாட்டு முறையாக மட்டுமல்லாமல் தேங்காய் மற்றும் அதன் பயன்பாட்டை மக்களிடையே ஊக்குவிக்கும் ஒன்றாகவும் இருந்திருக்கிறது.

தேங்காய் பால்

தாய்ப்பாலுக்கு அடுத்ததாக சத்துக்கள் நிறைந்ததாக தேங்காய்ப்பாலை நம் முன்னோர்கள் முன்னிறுத்தியுள்ளனர். அத்துடன் சமையலில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் பயன்பாடு காலப்போக்கில் குறைந்து வருகிறது. தற்போது கண்ணாடி அரங்குகளில் விதம் விதமான வண்ணங்களில் கண்ணைப்பறிக்கும் தின் பண்டங்களை வாங்கி உண்பது குழந்தைகளுக்கு விருப்பமான ஒன்றாக உள்ளது. ஆனால் கடந்த காலங்களில் சிறுதானியங்கள் மற்றும் தேங்காய் பயன்படுத்தி வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருந்தன. அதுபோன்றதொரு ஆரோக்கியமான உணவுப்பண்டத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் விழாவாகவும் இந்த தேங்காய் சுடும் பண்டிகை உள்ளது. ஆடி மாதத்தின் முதல் நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

வெடி தேங்காய்

தேர்ந்தெடுக்கப்பட்ட தேங்காயின் மட்டையை உரித்து நார்களை அகற்றுகிறார்கள். பின்னர் தேங்காயை நன்கு தேய்த்து மேலே உள்ள ஓட்டை மெல்லியதாக்குகிறார்கள். பின்னர் தேங்காயின் மீது அரைத்த மஞ்சளைப் பூசுகிறார்கள். மேலும் தேங்காயின் ஒரு கண்ணில் துளையிட்டு தண்ணீரை வெளியே எடுத்து விடுகிறார்கள். அந்த துளை வழியாக தேங்காய்க்குள் பச்சரிசி, வெல்லம், அவல், பாசிப்பருப்பு, வறுகடலை ஆகியவற்றை லேசாக அரைத்த கலவையை செலுத்துகிறார்கள். பின்னர் எடுத்து வைத்த தேங்காய் தண்ணீரை சேர்த்து துளையை நீண்ட குச்சியால் மூடி விடுகிறார்கள். பொதுவாக இவ்வாறு மூடுவதற்கு அழிஞ்சில் எனப்படும் மருத்துவ குணம் கொண்ட மரத்தின் குச்சியை பயன்படுத்துகிறார்கள். வீட்டின் முன்பு திறந்த வெளியில் தீ மூட்டி நீண்ட குச்சியை கைகளால் பிடித்துக் கொண்டு தேங்காயை நெருப்பில் சுடுகிறார்கள். தேங்காயின் ஓடு கருகி தீப்பிடிக்கத் தொடங்குவதுடன் வெடிக்கத் தொடங்கும். இதனால் இதனை வெடி தேங்காய் என்றும் சொல்வார்கள்.

பாரம்பரியம்

வெடித்த தேங்காயை அருகிலுள்ள விநாயகர் கோவில் மற்றும் தங்கள் இஷ்ட தெய்வங்களின் கோவிலில் வைத்து வழிபடுவார்கள். பின்னர் தேங்காய் மற்றும் அதனுள் உள்ள சத்துள்ள கலவையை எடுத்து அனைவரும் பிரசாதமாக சாப்பிடுவார்கள். பாரம்பரியம், குழு மனப்பான்மை, இறை நம்பிக்கை, சத்துள்ள உணவை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பலவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இதுபோன்ற பண்டிகைகள் காலப்போக்கில் மறைந்து வருகிறது. மீண்டும் பாரம்பரியமான பண்டிகைக்கொண்டாட்டங்கள் கிராமப்புறங்களில் மீட்டெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டும். அதேநேரத்தில் கொங்கு மண்டலத்தில் ஒரு சில இளைய தலைமுறையினர் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்காக தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடுவது மனதுக்கு சற்று ஆறுதல் தருவதாக உள்ளது.

பண்டிகைகளில் அறிவியல்

மகுடீஸ்வரன் (மடத்துக்குளம்):- நமது பாரம்பரிய பண்டிகைகள் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு அறிவியல் ஒளிந்திருக்கும். அதுமட்டுமல்லாமல் வாழ்வியல் மேம்பாட்டுக்கான வழிகாட்டல்களும் இருக்கும்.ஆனால் பல பண்டிகைக் கொண்டாட்டங்கள் காலப்போக்கில் மறைந்து வருவது வேதனையான விஷயமாக உள்ளது.

கொங்கு மண்டலத்தில் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடுவதாக கூறப்பட்டாலும் திருப்பூர், கோவை மாவட்டங்களில் பெரிய அளவில் கொண்டாடுவதாக தெரியவில்லை.சேலம், ஈரோடு மாவட்டங்களில் இன்றுவரை சிறப்பாக கொண்டாடி வருவதாக கேள்விப்பட்டுள்ளேன்.

ஆடிப்பெருக்கு

அழகுசுந்தரி (வேடப்பட்டி, மடத்துக்குளம்):- நமது பகுதியைப் பொறுத்தவரை ஆடி1-ந்தேதி தேங்காய் சுடும் பண்டிகையாக கொண்டாடியதாக நினைவில் இல்லை.ஆனால் ஆடி மாதத்தில் பல வீடுகளில் இளசும் இல்லாமல் முற்றியதும் இல்லாமல் உள்ள தேங்காயை தேர்வு செய்து உள்ளே வெல்லம், கடலை, பாசிப்பயறு உள்ளிட்ட சத்தான பொருட்களை திணித்து சுட்டு சாப்பிடும் பழக்கம் உண்டு. அது மிகவும் சத்துள்ள தின்பண்டம் என்ற வகையிலும், குழந்தைகளுக்கு உற்சாகம் தரும் விஷயமாகவும் இருப்பதால் வீடுகளின் முன் தீ மூட்டி தேங்காய் சுட்டு சாப்பிடுவோம். ஆனால் காலப்போக்கில் எந்திரமயமாக வாழ்க்கை மாறிவிட்ட நிலையில் இதுபோன்ற பல விஷயங்களை மறந்து விட்டோம்.ஆடி மாதம் 18-ந் தேதி ஆற்றங்கரைகளில் உற்சாகமாக கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு உள்ளிட்ட பல பண்டிகைகளை கொண்டாடுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் நம் பாரம்பரிய பழக்கங்கள் பலவற்றையும் தொலைத்து விடுவோம் என்றே எண்ணத் தோன்றுகிறது.


Next Story