தேங்காய்களை உடைத்து நூதன போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் தேங்காய்களை உடைத்து நூதன போராட்டம் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடந்தது.
கும்பகோணம்;
கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் தேங்காய்களை உடைத்து நூதன போராட்டம் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடந்தது.
தேங்காய் உடைத்து போராட்டம்
கும்பகோணத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவிலில் சிதறு தேங்காய் உடைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கும்பகோணம் ரெயில் நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோவில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தலைவர் பி.சின்னதுரை தலைமை தாங்கினார். முன்னோடி விவசாயி ஆதி கலியபெருமாள் முன்னிலை வகித்தார். செயலாளர் சுந்தர.விமல்நாதன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
ஓய்வூதியம்
போராட்டத்தில் பிரதமரின் விவசாயிகள் வெகுமதி திட்ட நிதியை ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும், குத்தகை விவசாயிகளுக்கும், பிரதமர் விவசாயிகள் வெகுமதி திட்ட நிதியை பாரபட்சமின்றி வழங்க வேண்டும், காவிரி நதியினை தூய்மைப்படுத்தி பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். உள்நாட்டு விவசாயிகள் நலன் கருதி தேங்காய், பனை வித்துக்களுக்கு நியாயமான விலை அறிவிக்க வேண்டும், 58 வயது பூர்த்தி அடைந்த விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், மத்திய அரசு கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றிற்கு ரூ.160 விலையை உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும்.
வட்டியில்லா கடன்
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்கப்படும் வேளாண் கடன்களை வட்டியில்லாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கையில் தேசியக்கொடியை ஏந்தி கோஷம் எழுப்பினர்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வருகிற நாடாளுமன்ற குளிர் காலக்கூட்டத்தொடரின் போது, நாடாளுமன்றம் முன்பு இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி மத்திய நிதி, வேளாண்மை துறைகளின் அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளதாக கூறினர்.முடிவில்புவனேஸ்வரி நன்றி கூறினார்.