தோட்டத்தில் தேங்கிய தேங்காய் மட்டைகள்
தோட்டத்தில் தேங்கிய தேங்காய் மட்டைகள்
ஆனைமலை
ஆனைமலை ஒன்றியத்தில் 23 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. தினசரி 5 லட்சம் இளநீர் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் காயர் பித், நார், ஓலை, கயிறு, மட்டை என மதிப்பு கூட்டு பொருள் தயாரிக்கும் 68 தொழிற்சாலைகள் உள்ளன.
இந்தநிலையில் ஆனைமலை தாலுகாவில் உள்ள பல தொழிற்சாலைகள் மின்கட்டணம் உயர்வு, லாரி பற்றாக்குறை, ஆட்கள் பற்றாகுறை, நார் கட்டுக்கு மதிப்பு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மூடும் நிலையில் உள்ளன. இதனால் பல ஆயிரம் கூலித்தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் நிலவுகிறது. மேலும் வெளிநாடுகளுக்கு நார், பித், ஏற்றுமதி குறைந்ததின் காரணமாக தேங்காய் மட்டைகள் தோட்டங்களில் தேங்கியுள்ளன. இதனால் விவாசாயிகள் வருவாய் இழந்து கவலை அடைந்துள்ளர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஆனைமலை ஒன்றியத்தில் மழை அவ்வப்போது பொழிவதால் தேங்காய் மட்டைகள் நனைத்து விலை குறைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பச்சை மட்டை 2 ரூபாய் 80 காசுகளும், காய்ந்த மட்டை 1 ரூபாய் 50 காசுகளும் இருந்தது. தற்போது பச்சை மட்டை 1 ரூபாய் 50 காசுகளுக்கும், காய்ந்த மட்டை 50 காசுகளுக்கும் விற்பனையாகிறது. இநத விலை வீழ்ச்சியை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.