கோவை கார் வெடிப்பு; ஜமேசா முபின் உடலை அடக்கம் செய்ய ஜமாத்தார்கள் மறுப்பு ; துணை ராணுவம் குவிப்பு


கோவை கார் வெடிப்பு; ஜமேசா முபின் உடலை அடக்கம் செய்ய ஜமாத்தார்கள் மறுப்பு ; துணை ராணுவம் குவிப்பு
x

கோவை மாநகரம் முழுக்க போலீஸ் மற்றும் அதிவிரைவுப் படையான துணை ராணுவத்தின் கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

கோவை

கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று அதிகாலை கார் வெடித்து அதில் இருந்தவர் பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு விமானம் மூலம் கோவை வந்தார். தொடர்ந்து அங்கிருந்து காரில் சம்பவ இடமான கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதிக்கு சென்றார்.

அங்கு வெடித்து சிதறிய கார், சேதமான கோட்டை ஈஸ்வரன் கோவிலின் முன்பகுதி, மேலும் விபத்து நடந்த பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட தடயங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து துப்பு துலக்க 6 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சிலிண்டர் வெடித்து இறந்த ஜமேஷா முபின் சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியேறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் ஜமேஷா முபின் உள்ளிட்ட 5 பேர் இருக்கின்றனர். அவர் உடன் இருந்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஜமேசா முபீன் வீடு இருக்கும் பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த சி.சி.டி.வி.யில் ஜமேசா முபினுடன் சில நபர்கள் இணைந்து ஜமேசா முபின் வீட்டில் இருந்து சில மர்மமான பொருட்களை எடுத்து செல்வது தொடர்பான காட்சிகள் கிடைத்துள்ளன. இது சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு முன்தினமான சனிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் இது நடந்துள்ளது.

இந்நிலையில், ஜமேசா முபீனுடன் இருந்த உக்கடத்தைச் சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள அவர்களிடம், அவர்கள் எடுத்து சென்ற பொருள் என்ன? எதற்காக எடுத்து சென்றனர்? இந்த விபத்து இல்லாமல் வேறு ஏதேனும் திட்டத்துடன் அவர்கள் செயல்பட்டுள்ளனரா எனப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜமேசா முபின் உடல் பிரதேப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது மனைவியிடம் நேற்று காலை ஒப்படைக்கப்பட்டது. ஆனால், உடலை அடக்கம் செய்ய ஜமாத்துகள் முன்வரவில்லை. கோவையின் அனைத்து ஜமாத்துகளும் அமைதியை விரும்புவதால், சமூக விரோத செயலுக்கு திட்டுமிட்டது போல் முபினின் மரணம் இருப்பதால் அவரது உடலை அடக்கம் செய்ய முன்வரவில்லை என தெரிவித்தனர். இந்நிலையில் கோவை பூ மார்கெட் ஜமாத்தில் மனிதாபிமான அடிப்படையில் முபினின் உடலை அடக்கம் செய்தனர்.

இதனையடுத்து கோவை மாநகரம் முழுக்க போலீஸ் மற்றும் அதிவிரைவுப் படையான துணை ராணுவத்தின் கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. கோவை முழுவதும் பலத்த பாதுகாப்புப் பணியில் 2,000க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுவருகின்றனர். பாதுகாப்புப் பணியில் வஜ்ரா வாகனமும் பயன்படுத்தப்படுகிறது.


Next Story