கோவை கார் வெடித்த சம்பவம்...! ஜமேசா முபின் வீட்டில் இருந்து எடுத்து செல்லப்படும் மர்ம பொருள்; வெளியான அதிர்ச்சி சி.சி.டி.வி. காட்சி!


கோவை கார் வெடித்த சம்பவம்...! ஜமேசா முபின் வீட்டில் இருந்து எடுத்து செல்லப்படும் மர்ம பொருள்; வெளியான அதிர்ச்சி சி.சி.டி.வி. காட்சி!
x

சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், ஜமேஷா முபின் உடன் இருந்த 4 பேர் யார் என விசாரித்து வருகின்றனர்.

கோவை

கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று அதிகாலை கார் வெடித்து அதில் இருந்தவர் பலியானார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று காலை விமானம் மூலம் கோவை வந்தார்.

தொடர்ந்து அங்கிருந்து காரில் சம்பவ இடமான கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதிக்கு சென்றார். அங்கு வெடித்து சிதறிய கார், சேதமான கோட்டை ஈஸ்வரன் கோவிலின் முன்பகுதி, மேலும் விபத்து நடந்த பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட தடயங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து துப்பு துலக்க 6 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

இதன்பின்னர் டி.ஜி.பி. சைலலேந்திர பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை கோட்டை மேடு ஈஸ்வரன் கோவில் அருகே கார் வெடித்ததில் இறந்தவர் அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளது. அவரது பெயர் ஜமேஷா முபின், என்ஜினீயர். அவர் உக்கடம் பகுதியை சேர்ந்தவர்.

இந்த கோவில் அருகே போலீஸ் சோதனை சாவடி உள்ளது. காரில் ஜமேஷா முபின் வந்த போது போலீசாரை கண்டதும், காரை விட்டு இறங்கி செல்ல முயன்று உள்ளார். அப்போது இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரது வீட்டில் தனிப்படையினர் சோதனை நடத்தினர். அப்போது நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொட்டாசியம் குளோரைடு, அலூமினியம் நைட்ரேட், சல்பர், உள்ளிட்ட வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இறந்த நபர் மீது வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை.

மேலும் அவரது செல்போனை கைப்பற்றி அவருடன் தொடர்பில் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் துப்பு துலக்கப்பட்டு உள்ளது.

ஜமேஷா முபின் பயன்படுத்திய கார் 9 பேரிடம் கைமாறி 10-வது நபரிடம் வந்து உள்ளது. அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மேலும் கியாஸ் சிலிண்டர்களை அவருக்கு சப்பளை செய்தது யார் என்பது குறித்தும் தெரியவந்து உள்ளது. கார் வெடித்த இடத்தில் இருந்து ஏராளமான ஆணிகள், கோலி குண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

ஏற்கனவே ஜமேஷா முபின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் சோதனை நடத்தி உள்ளனர்.

மேலும் அவர் உளவுத்துறை கண்காணிப்பிலும் இருந்து வந்து உள்ளார். ஜமேஷா முபின் தற்கொலைப்படையாக செயல்பட வாய்ப்பு குறைவு. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். வழக்குப்பதிவு இந்த சம்பவம் குறித்து சட்டப்பிரிவுகள் 174, வெடி பொருள் தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோவையில் மேலும் அசாம்பாவிதம் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை துப்பு துலக்க போலீஸ் அதிகாரிகள் 6 பேர் கொண்ட தனிப்படையினர் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், சிலிண்டர் வெடித்து இறந்த ஜமேஷா முபின் சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியேறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் ஜமேஷா முபின் உள்ளிட்ட 5 பேர் இருக்கின்றனர். அவர் உடன் இருந்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஜமேசா முபீன் வீடு இருக்கும் பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த சி.சி.டி.யி.யில் ஜமேசா முபினுடன் சில நபர்கள் இணைந்து ஜமேசா முபின் வீட்டில் இருந்து சில மர்மமான பொருட்களை எடுத்து செல்வது தொடர்பான காட்சிகள் கிடைத்துள்ளன.

இது சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு முன்தினமான சனிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் இது நடந்துள்ளது. அதன் அடிப்படையில் ஜமேசா முபினுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அவர்கள் எடுத்து சென்ற பொருள் என்ன? எதற்காக எடுத்து சென்றனர்? இந்த விபத்து இல்லாமல் வேறு ஏதேனும் திட்டத்துடன் அவர்கள் செயல்பட்டுள்ளனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்துவருகின்றனர்.


Next Story