கோவை மாவட்டம் மாநில அளவில் 4-வது இடத்தை பிடித்தது
கோவை மாவட்டம் மாநில அளவில் 4-வது இடத்தை பிடித்தது
கோவை
பிளஸ்-2 பொதுத்தேர்வில் கோவை மாவட்டம் மாநில அளவில் 4-வது இடத்தை பிடித்தது. 96.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
96.91 சதவீதம் தேர்ச்சி
கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று மொத்தம் 365 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் படித்த 15 ஆயிரத்து 385 மாணவர்களும், 18 ஆயிரத்து 352 மாணவிகள் என்று மொத்தம் 33 ஆயிரத்து 737 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினார்கள்.
அதில், 14 ஆயிரத்து 705 மாணவர்களும், 17 ஆயிரத்து 990 மாணவிகள் என்று மொத்தம் 32 ஆயிரத்து 695 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 96.91 சதவீதம் தேர்ச்சி ஆகும். இதில் மாணவர்களின் தேர்ச்சி 95.58 சதவீதம், மாணவிகளின் தேர்ச்சி 98.03 சதவீதம் ஆகும். இதனால்மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 2.45 சதவீதம் அதிகம் ஆகும்.
மாநில அளவில் 4-வது இடம்
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. 2019-ம் ஆண்டில் நடந்த பிளஸ்-2 தேர்வு முடிவில் 95.01 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 4-வது இடத்தை கோவை மாவட்டம் பிடித்தது. அதுபோன்று இந்த ஆண்டிலும் 96.91 சதவீதம் தேர்ச்சி பெற்று 4-வது இடத்தை தக்க வைத்துக்கொண்டது.
மேலும் கடந்த 2019-ம் ஆண்டில் தேர்ச்சி சதவீதம் 95.01 ஆகும். ஆனால் இந்த ஆண்டு அதைவிட 1.90 சதவீதம் அதிகமாக பெற்று 96.91 சதவீதம் பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் வரும் ஆண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.