கோவை: மேம்பால தூணில் அரசு பஸ் மோதி விபத்து - 5 பேர் படுகாயம்


கோவை: மேம்பால தூணில் அரசு பஸ் மோதி விபத்து -  5 பேர் படுகாயம்
x

கோவை அவினாசி சாலையில் எல்.ஐ.சி. சிக்னல் அருகே புதிதாக கட்டப்பட்டு உள்ள மேம்பால தூணில் அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோயம்புத்தூர்


கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூரை நோக்கி நேற்று இரவு 9.35 மணி அளவில் அரசு பஸ் ஒன்று சென்றது. பஸ்சை திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டினார். அப்போது இரவு 9.45 மணி அளவில் அந்த பஸ் கோவை அவினாசி சாலை எல்.ஐ.சி. சிக்னல் வளைவில் வேகமாக திரும்பியது.

அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி அவினாசி சாலையில் புதிதாக கட்டப்பட்டுவரும் மேம்பால தூணில் பயங்கரமாக மோதியது.

5 பேர் படுகாயம்

இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து கீழே விழுந்தது. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் விபத்தை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், வாகன ஓட்டிகள் அங்கு விரைந்து வந்தனர். பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி காலில் பலத்த காயத்துடன் தவித்த டிரைவர் கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த கண்டக்டர் முகமது (வயது 45) மற்றும் பயணிகள் பல்லடம் மின் நகரை சேர்ந்த வசந்தாமணி (65), தனிஷ்கா (9), கோவை அவினாசி சாலையை சேர்ந்த சதீஷ்குமார் (47) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

1 More update

Next Story