சென்னை வங்கி கொள்ளை வழக்கில் கோவை நகை பட்டறை உரிமையாளர் கைது


சென்னை வங்கி கொள்ளை வழக்கில் கோவை நகை பட்டறை உரிமையாளர் கைது
x

சென்னை வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக கோவையை சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்


சென்னை வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக கோவையை சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

வங்கியில் 32 கிலோ நகை கொள்ளை

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான பெட் வங்கி நிதிச்சேவை மையத்தில் கடந்த 13-ந் தேதி 31.7 கிலோ நகைகள் கொள்ளை போனது. இது தொடர்பான புகாரின் பேரில் அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொள்ளை சம்பவத்தை அதே வங்கியில் மண்டல மேலாளராக பணிபுரிந்த முருகன் என்பவர் மூளையாக இருந்து தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அரங்கேற்றியது தெரியவந்தது. கொள்ளையர்களை பிடிக்க 11 தனிப்படை அமைக்கப்பட்டது.

3 பேர் கைது

தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 30), பாலாஜி (28) முக்கிய குற்றவாளியான முருகன் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் சிலர் வேறு எங்கெல்லாம் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

கோவை நகை பட்டறை உரிமையாளர்

இதற்கிடையே கொள்ளை சம்பவத்தில் சூர்யா (31) மற்றும் கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த நகைப்பட்டறை உரிமையாளர் ஸ்ரீவத்சவ் (31) உள்பட சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

சூர்யா, ஸ்ரீவத்சவ் ஆகியோர் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் சூர்யாவிடம் இருந்த 13.7 கிலோ நகையை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி விற்பதற்கு முயற்சி செய்து வந்த தகவலும் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கோவை வந்தனர். பின்னர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள குறிப்பிட்ட தங்கும் விடுதியை சுற்றி வளைத்த தனிப்படையினர், அங்கு பதுங்கி இருந்த ஸ்ரீவத்சவ்வை கோவை போலீசாரின் உதவியுடன் மடக்கி பிடித்தனர்.இதற்கிடையே தன்னை போலீசார் தேடுவதை அறிந்த சூர்யா, தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து தப்பிவிட்டார்.

திடுக்கிடும் தகவல்கள்

தனிப்படையினரிடம் சிக்கிய ஸ்ரீவத்சவ்விடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதுகுறித்த விவரம் வருமாறு:-

சென்னை வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் உள்ளிட்டோர் உருக்க திட்டமிட்டனர். இதற்காக சென்னை அரும்பாக்கத்தில் விடுதி ஒன்றில் அறை எடுத்து நகைகளை அங்கு பாதுகாப்பாக வைத்துக்கொண்டு செந்தில்குமாரின் நண்பரான நகைப்பட்டறை உரிமையாளர் ஸ்ரீவத்சவ் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு கிலோக்கணக்கில் நகைகள் உள்ளன. எனவே அதை உருக்குவதற்காக நகை உருக்கும் மிஷினுடன் சென்னைக்கு வருமாறு அழைத்து உள்ளார்.

இதையடுத்து நகை உருக்கும் மிஷினுடன் சென்னை சென்ற ஸ்ரீவத்சவ், அங்கு நகையை உருக்க முயன்றார். அப்போது விடுதியில் இருந்து புகை அதிகளவு வெளியேறி உள்ளது. இதனால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த அவர்கள் நகையை உருக்குவதை கைவிட்டு கொள்ளையடித்த நகையை தங்களுக்குள் பங்குபோட்டுக்கொண்டு அங்கு இருந்து சென்றனர்.

கோவையில் கைது

அப்போது தான் சூர்யா, தனது பங்கான 13.7 கிலோ நகையை எடுத்துக்கொண்டு ஸ்ரீவத்சவுடன் கோவை வந்தார். அங்கு வைத்து நகையை உருக்கி விற்பனை செய்துவிடலாம் என்று எண்ணி கோவை ஆர்.எஸ்.புரம் வந்து விடுதியில் அறை எடுத்து தங்கினார். பின்னர் நகையை பட்டறைக்கு எடுத்து சென்று உருக்கலாம் என்று எண்ணியபோது தான் விடுதியில் இருந்த தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் சென்னை வங்கி நகை கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதை பார்த்து உள்ளார்.

இதனால் தான் போலீசில் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணிய அவர் நகையுடன் தப்பிச்சென்றார். கோவையில் பதுங்கி இருந்த ஸ்ரீவத்சவ் தனிப்படை போலீசில் சிக்கினார்.

பரபரப்பு

கோவை ஆர்.எஸ்.புரத்தில் நகை பட்டறை நடத்தி வரும் ஸ்ரீவத்சவ் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்தபோது அவருக்கு செந்தில்குமாரின் நட்பு கிடைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவருடைய மனைவி டாக்டர் என்பதும், மாமனார் கோவையில் நகைக்கடை வைத்து நடத்தி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து ஸ்ரீவத்சவை தனிப்படை போலீசார் வேன் மூலம் சென்னைக்கு அழைத்து சென்றனர். சென்னை வங்கி கொள்ளை வழக்கில் கோவையை சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் கைது செய்யப்பட்டு இருப்பது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story