கோவையில் ரெயில் மறியல்:52 பேர் கைது


கோவையில் ரெயில் மறியல்:52 பேர் கைது
x

கோவையில் ரெயில் மறியல்:52 பேர் கைது

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில் மறியலில் ஈடுபட்ட 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரெயில் மறியல்

மத்திய அரசு அக்னிபத் என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்து உள்ளது. இந்த திட்டத்தின்படி ராணுவத்தில் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது. பலஇடங்களில் போராட்டங்களும் நடந்து வருகின்றன. அந்த வகையில் கோவை ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அப்போது அங்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமையில் கொடிகளை ஏந்தி கோஷமிட்டபடி ரெயில் நிலையத்துக்கு முன்பு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

52 பேர் கைது

இதையடுத்து போலீசார் இந்த அமைப்பை சேர்ந்த 25 பேரை கைது செய்து வாகனத்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இந்த நேரத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் அசாருதீன் தலைமையில், ரெயில் நிலைய பின்பக்க நுழைவு வாசல் வழியாக ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தனர். அப்போது அங்குள்ள நடைமேடையில் நின்றிருந்த ரெயிலின் முன்பு தண்டவாளத்தில் படுத்தபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு உடனடியாக சென்று மாநில துணைத்தலைவர் நிருபன் சக்ரவர்த்தி, மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜ் உள்பட 27 பேரை கைது செய்து தனியார் மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். நேற்று ரெயில் மறியல் மற்றும் முற்றுகையில் ஈடுபட்ட 52 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Next Story