"பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" தி.மு.க.வில் இணைந்த கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டி


பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் தி.மு.க.வில் இணைந்த கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 7 Dec 2022 10:39 AM GMT (Updated: 7 Dec 2022 10:47 AM GMT)

அதிமுகவினருக்காக வக்காலத்து வாங்கி பேசியதற்காக நான் மக்களிடத்தில் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தி.மு.க.வில் இணைந்த கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

சென்னை,

அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கோவை மாவட்ட செயலாளராக இருந்த அவர், கடந்த 3-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில்,இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் தி.மு.க.வில் இணைந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நானும் என்னுடைய கோவை மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் பாரதி, மாநகர் மாவட்ட பொருளாளர் தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் அமைச்சர் செந்தில் செந்தில் பாலாஜியுடன் கலந்து பேசினோம். ஏழைகளுக்காக ஆட்சி நடத்தும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் எங்களை இணைத்துக் கொண்டோம்.

1971 ஆம் ஆண்டு 14 வயதில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு செயல்பட்ட நான் இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் தாய் கழகத்தில் இணைந்து செயல்பட வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாலரை ஆண்டுகள், அதாவது 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஒரு சுனாமி வந்து நாட்டில் அழிவை ஏற்படுத்தியது போல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தமிழகத்தை அழிவு பாதைக்கு அழைத்து சென்றது.

எடப்பாடியின் செயல்பாட்டின் மூலம் இன்று சீரழிந்த தமிழகத்தை இந்த ஒன்றரை ஆண்டுகளில் மக்களுடைய மனநிலையை புரிந்து கொண்டு ஏழை எளியவர்களுக்காக மக்கள் ஆட்சி தத்துவதத்தை செயல்படுத்துகிற முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாங்கள் செயல்பட வந்திருக்கிறோம். இந்த நாலரை ஆண்டுகளாக அதிமுகவினருக்காக வக்காலத்து வாங்கி பேசியதற்காக நான் மக்களிடத்தில் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

காரணம் என்னவென்றால் இன்று மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டத்தை திமுக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ 2000 வரை மிச்சமாகிறது. இபபடிப்பட்ட தாய்மார்களின் ஆதரவு நம் முதல்வருக்கு எப்போதும் உண்டு. இன்று தமிழகம் முழுவதும் எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை நடத்தி வருகிறார்கள். மின் தட்டுப்பாடே தமிழகத்தில் இல்லை. தமிழக மின்சார துறை தன்னிறைவு பெற்ற துறையாக உள்ளது.

100 யூனிட் இலவச மின்சாரத்தை தமிழக அரசு நிறுத்திவிடும் என தவறான பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். அந்த சூழ்நிலை எப்போதும் வராது. அதிமுக ஆட்சியில் தங்கமணி மின்சாரத் துறை அமைச்சராக இருந்த போது 10 ஆயிரம் விவதாயிகளுக்கு மட்டுமே இலவச மின்சாரம் கொடுத்தார்கள்.

ஆனால் இன்று ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச விவசாயத்தை முதல்வர் கொடுத்துள்ளார்கள். மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் ஸ்டாலினை காலில் விழுந்து ஆட்சியை பெற்ற எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.

அதிமுக என்ற கட்சி இப்போது கம்பெனியாகிவிட்டது. அதனால் உண்மையான அதிமுக தொண்டர்கள் முதல்வர் தலைமையை ஏற்று திராவிட பாரம்பரியத்தை தமிழகத்தில் என்றும் செயல்படுத்துவதற்காக வந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் மதவாதத்தை ஒழிக்க வேண்டும். ஜாதிக் கட்சிகளையும் வேரோடு ஒழிக்க வேண்டும். கோவா மாநகர் என்றால் அது திமுகவின் கோட்டை என்பதை அமைச்சர் செந்தில் பாலிஜி நிரூபித்துவிட்டார்.

அவருடன் நாங்களும் செயல்படுவோம். தமிழகத்தில் மதவாக கட்சிகளுக்கு இனி இடம் கிடையாது. திராவிட கட்சியே மீண்டும் மீண்டும் தமிழகத்தை ஆளும். மதவாத கட்சிகளுக்காக இடுப்பில் வேட்டி கட்டிக் கொண்டு சாமியார்கள் போல் வேலை செய்கிற அதிமுக தலைவரோடு இருக்க நான் விரும்பவில்லை. தெளிவாக முடிவு செய்து இங்கு வந்துவிட்டோம் எனறு கூறினார்.


Next Story