விழுப்புரம் நகராட்சியில்வரிவசூல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம்பொதுமக்கள் உடனடியாக செலுத்த ஆணையர் வேண்டுகோள்
விழுப்புரம் நகராட்சியில் வரிவசூல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வரிகளை உடனடியாக செலுத்தும் படி ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.
விழுப்புரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளது. இங்கு சொத்துவரி, குடிநீர் இணைப்பு கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி, குத்தகை இனங்கள், திடக்கழிவு மேலாண்மை கட்டணம், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் உள்ளிட்ட வரிகளின் மூலம் நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், மக்களுக்கான அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக வரிவசூல் செய்யும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக மேற்கண்ட வரியினங்கள், வாடகை பாக்கி என நகராட்சிக்கு ரூ.17 கோடிக்கும் மேல் நிலுவையில் உள்ளது.தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகளில் வரிவசூலில் விழுப்புரம் 135-வது இடத்தில் உள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு 11 வருவாய் உதவியாளர்கள், 3 வருவாய் ஆய்வாளர், 1 வருவாய் அலுவலர் என 15 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தொழில்வரி சிறப்பு முகாம்
இதை தொடர்ந்து நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா தலைமையிலான 7 குழுவினர் வரிபாக்கியை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று தொழில்வரி சிறப்பு முகாம் நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா தலைமையில் நடைபெற்றது.
இதில் நகரமன்ற தலைவர் தமிழ் செல்வி கலந்து கொண்டு தொழில் வரி செலுத்துவதற்கான விண்ணப்பத்தை தொழில் செய்பவர்களுக்கு வழங்கினார். பின்னர், நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா கூறியதாவது:-
நகராட்சியில் வியாபாரம் செய்பவர்கள், தொழில்புரிவோர் என்று மொத்தம் 38 ஆயிரத்து 62 பேர் தொழில் வரி செலுத்தவேண்டும். இதுவரை ரூ.89 லட்சத்து 81 ஆயிரம் வரைக்கும் தொழில்வரி பாக்கியுள்ளது. இந்த வரியை செலுத்த வணிகர் சங்கங்களுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
சீல் வைக்க நடவடிக்கை
சொத்துவரி செலுத்தாத அரசு அலுவலகங்களில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ரூ.65 லட்சமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ரூ.41 லட்சமும், மாவட்ட விளையாட்டு அலுவலகம் ரூ.36 லட்சம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் சொத்துவரி செலுத்த வேண்டி உள்ளது. அதேபோன்று, தனியார் நிறுவனங்கள், தொழில் செய்பவர்கள் ரூ.1 கோடி வரைக்கும் பாக்கி வைத்துள்ளனர்.
வரியை செலுத்தாவிட்டால் நகராட்சிக்கு செலுத்தவேண்டிய தொகைக்கு ஈடான பொருட்களை ஜப்தி செய்யவும், கடை அல்லது அலுவலகத்தை பூட்டி சீல் வைக்கவும் நகராட்சி நிர்வாகத்திற்கு அதிகாரம் உள்ளது என்றார்.