இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடம் வழங்காததால்ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்கள்கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடம் வழங்காததால்ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்கள்கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Sep 2023 7:00 PM GMT (Updated: 4 Sep 2023 7:00 PM GMT)
நாமக்கல்

இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடம் வழங்காததை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

98 வீடுகள் இடிப்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் சரளைமேடு காமராஜர் நகர் பகுதியில் சுமார் ஓராண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 98 வீடுகள் கோர்ட்டு உத்தரவின் பேரில் இடித்து அகற்றப்பட்டன.

அப்போது அதிகாரிகள் இவர்களுக்கு மாற்று இடம் தருவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது சுமார் 10 கி.மீட்டர் தொலைவில் மாற்றுஇடம் தருவதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அந்த பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் போராடி வருகின்றனர் இது தொடர்பாக பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்தனர்

இந்த நிலையில் நேற்று மாற்று இடம் வழங்கப்படாததை கண்டித்து காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாயில் கருப்புதுணி கட்டிக்கொண்டு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு ரேஷன்கார்டு, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க வந்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:- கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கோர்ட்டு உத்தரவை காரணம் காட்டி எங்களது வீடுகளை அதிகாரிகள் இடித்து விட்டனர். அதற்கு மாற்று இடம் தருவதாக கூறிய அதிகாரிகள் எங்களது ஊராட்சியிலேயே இடம் வழங்காமல் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் ஆக்கிரமிப்பையும் முழுமையாக அகற்றாமல் இருந்து வருகின்றனர். எனவே அரசு அதிகாரிகளை கண்டித்து ரேஷன்கார்டு, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைக்க வந்து உள்ளோம். அவற்றை பெற்றுக்கொண்டு வாழ தகுதியான நாட்டிற்கு எங்களை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story