அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு பாகுபாடின்றி கிடைப்பதை ஊராட்சி தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்


அரசின் நலத்திட்டங்கள்   மக்களுக்கு பாகுபாடின்றி கிடைப்பதை ஊராட்சி தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்  கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 21 Oct 2023 7:00 PM GMT (Updated: 21 Oct 2023 7:00 PM GMT)

அரசின் திட்டங்கள் மக்களுக்கு பாகுபாடின்றி கிடைப்பதை ஊராட்சி தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.

தர்மபுரி

அரசின் திட்டங்கள் மக்களுக்கு பாகுபாடின்றி கிடைப்பதை ஊராட்சி தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.

கலந்தாய்வு கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் நிர்வாக கட்டமைப்பின் செயல்பாடுகளை சரியான வகையில் வழிநடத்த வேண்டும். கிராம ஊராட்சிகளால் அளிக்கப்பட வேண்டிய சேவைகள், நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள், விருப்ப கடமைகள் ஆகியவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும். தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்த 3 மாதங்களுக்கு ஒரு முறை ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.

சுகாதாரமான குடிநீர்

தற்போது கிராம ஊராட்சிகளில் நடைமுறைப்படுத்தப்படும் இணைய வழி வசதி, மனை பிரிவு ஒப்புதல் வழங்குதல், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகியவை தொடர்பான நடைமுறைகளை சிறப்பாக மேற்கொண்டு அரசின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகளை தங்கள் ஊராட்சிகளில் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது டிஜிட்டல் சூழலில் இணையதள சேவைகளை பொதுமக்கள் எளிதாக பயன்படுத்திக்கொள்ள உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரித்து பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான குடிநீர் பொதுமக்களுக்கு தினமும் முறையாக வினியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாத வகையில் சமமாக கிடைப்பதை ஊராட்சி மன்ற தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story