உயர்கல்வியில் மாணவர்களை சேர்க்கும் பணியைவழிகாட்டல் குழுக்கள் சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டும்ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்


உயர்கல்வியில் மாணவர்களை சேர்க்கும் பணியைவழிகாட்டல் குழுக்கள் சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டும்ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 22 April 2023 7:00 PM GMT (Updated: 22 April 2023 7:00 PM GMT)
தர்மபுரி

உயர்கல்வியில் மாணவர்களை சேர்க்கும் பணியை வழிகாட்டல் குழுக்கள் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.

வழிகாட்டல் குழு

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்குதல் குழு குறித்த ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:- தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பள்ளி படிப்பை முடித்த மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்விக்கான வழிகாட்டுதலை வழங்கி வருகிறது. நடப்பாண்டில் இந்த திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட உள்ள பள்ளி அளவிலான வழிகாட்டல் குழு வருகிற ஜூன் மாதம் 8-ந்தேதி முதல் செயல்பட உள்ளது.

சேவை மனப்பான்மை

10- ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத பள்ளி இடை நின்ற மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர தகுந்த வாய்ப்பை உருவாக்குகிற வகையில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் பயிற்சிகள் வருகிற மே மாதம் 5- ந்தேதிவரை நடைபெற உள்ளன.

எனவே 10- ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு படித்து உயர் கல்வியை தொடராத மாணவர்கள் உயர் கல்வி கற்பதற்கு வழிகாட்டும் இந்த ஆலோசனைக்குழுவை அணுகி உயர் கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த வழிகாட்டும் ஆலோசனைக்குழுக்கள், இது போன்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை உயர் கல்வியில் சேர்க்கும் பணிகளை சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ஜெயபிரகாசம், கேசவக்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் ரவிக்குமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள், ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.


Next Story