தர்மபுரியில்காலை உணவு திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது


தர்மபுரியில்காலை உணவு திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது
x
தினத்தந்தி 30 April 2023 12:30 AM IST (Updated: 30 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டத்தை திறம்பட செயல்படுத்துவது குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழ்நாடு முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டத்தை தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்பட்டு வரும் 48 அரசு தொடக்கப் பள்ளிகள், 9 அரசு நடுநிலைப் பள்ளிகள் 1 உயர்நிலைப்பள்ளி என மொத்தம் 58 அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு 2 கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக முதல் கட்டமாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 1.6.2023 அன்று நல்லம்பள்ளி, காரிமங்கலம், அரூர், தர்மபுரி மற்றும் பென்னாகரம் ஆகிய 5 வட்டாரங்களிலும், 2- ம் கட்டமாக 15.7.2023 அன்று மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் மற்றும் ஏரியூர் ஆகிய 4 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்கு அமைக்கப்படும் முதன்மை குழு கூட்டத்தை தலைமை ஆசிரியர் கூட்ட வேண்டும்.

பயிற்சி அளிக்கப்படும்

இந்தக் கூட்டத்தில் சமையல் செய்யும் இடம், வகுப்பறை, மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி, சமையலர் தேர்வு, தானியங்கி வங்கி அமைத்து ரொக்கத்தை பதித்து அரிசி, பருப்பு, சிறுதானிய வகைகள், காய்கறிகள், எண்ணெய் போன்றவற்றை நன்கொடையாக பெறுதல், 13 வகையான அங்கீகரிக்கப்பட்ட உணவு வகைகளை முறையாக தயார் செய்து வழங்குவதை உறுதி செய்ய முடிவெடுக்க வேண்டும்.

மகளிர் சுய உதவி குழு, ஊராட்சி மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களை தேர்வு செய்யும்போது குறைந்தபட்சம் 3 ஆண்டு அனுபவம், 10-ம் வகுப்பு கல்வி தகுதி, சமையல் திறன், ஆண்ட்ராய்டு மொபைல் போன் வசதி உள்ளிட்ட தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். உணவு மற்றும் மளிகை பொருட்கள் நுகர் பொருட்கள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவுத் துறை மூலம் கொள்முதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மகளிர் திட்ட இயக்குனர் பத்ஹி முகம்மது நசீர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மணிமேகலை, உதவி திட்ட அலுவலர்கள் சஞ்சீவ்குமார், வெற்றிச்செல்வன், செங்குட்டு வேல் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story