பவானிசாகரில் காலை உணவு திட்ட பயிற்றுனர்களுக்கான பயிற்சி; மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பங்கேற்பு முகாம்


பவானிசாகரில் காலை உணவு திட்ட பயிற்றுனர்களுக்கான பயிற்சி; மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பங்கேற்பு முகாம்
x

பவானிசாகரில் நடைபெற்று வரும் காலை உணவு திட்ட பயிற்றுனர்களுக்கான பயிற்சி முகாமில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு பேசினார்.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகரில் நடைபெற்று வரும் காலை உணவு திட்ட பயிற்றுனர்களுக்கான பயிற்சி முகாமில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு பேசினார்.

பயிற்சி முகாம்

பவானிசாகர் மண்டல ஊரக வளர்ச்சி நிறுவன வளாகத்தில் காலை உணவுத்திட்டம் தொடர்பாக தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களை சார்ந்த பயிற்றுனர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-

முதல் கட்டமாக...

அரசு பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டம் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்து செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக ஈரோடு, சென்னிமலை, அந்தியூர், அம்மாபேட்டை, சத்தியமங்கலம், நம்பியூர் ஆகிய வட்டாரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படும் நாள் முதல் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து கொடுமுடி, பவானி, தூக்கநாயக்கன்பாளையம், பெருந்துறை, பவானிசாகர், கோபி, மொடக்குறிச்சி ஆகிய வட்டாரங்களில் வருகிற ஜூலை 15-ந் ேததி முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

முன்னதாக, பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகள், பவானிசாகர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுடுதுறை பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மயானத்தில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதில் பவானிசாகர் ஊரக வளர்ச்சி பயிற்சி நிலையத்தின் முதல்வர் எஸ்.பி.பாலமுருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பி.ரமேஷ், உதவி திட்ட அலுவலர்கள், பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story