நாலுகோட்டை ஊராட்சியில் கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு


நாலுகோட்டை ஊராட்சியில் கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு
x
தினத்தந்தி 14 Jun 2023 12:04 AM IST (Updated: 14 Jun 2023 3:30 PM IST)
t-max-icont-min-icon

நாலுகோட்டை ஊராட்சியில் கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு செய்தார்.

சிவகங்கை


நாலுகோட்டை ஊராட்சியில் கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு செய்தார். அவரிடம் சமுதாய கூடம் கட்டித் தர வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கலெக்டர் ஆய்வு

சிவகங்கையை அடுத்துள்ள நாலுகோட்டை ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு செய்தார். அப்போது அங்கு உள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரில் ஊராட்சி சார்பில் நர்சரி பண்ணை அமைக்கப்பட்டு முருங்கை, தக்காளி, கத்தரி போன்ற செடிகள் மகளிர் குழு மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவைகளை கலெக்டர் பார்வையிட்டார். இதைதொடர்ந்து அங்கு அமைக்கப்பட்ட சமுதாய கிணறு மற்றும் அங்குள்ள பள்ளிக்கூடத்திற்கு சென்று கலெக்டர் ஆய்வு செய்தார்.

பள்ளிக்கூடத்தில் கழிவறை சரியாக உள்ளதா, சுத்திகரிக்கப்பட்ட குடி தண்ணீர் வழங்கப்படுகிறதா, மதிய உணவுதரமாக உள்ளதா, முட்டைகள் வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார். இந்த ஊராட்சியை சேர்ந்த இந்திரா நகரில் உள்ள ஆதிதிராவிடர் காலனிக்கு சென்ற கலெக்டர் அங்கு தெருவிளக்குகள் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்தார் மேலும் அங்கு வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை பார்வையிட்ட கலெக்டர் அவைகள் சரியாக உள்ளதா என்றும் அதற்கு தண்ணீர் வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.

மின்கம்பங்கள் மாற்ற நடவடிக்கை

அப்போது கலெக்டரிடம் இந்திரா நகரில் குடியிருக்கும் மக்கள் தங்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் உள்ளதாக கூறினர். உடனே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் திரு நாராயணபுரத்திற்கு சென்ற கலெக்டரிடம் அந்த பகுதி மக்கள் சாலை வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து அந்த கிராமத்திற்கு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் சாலை அமைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

அங்குள்ள பழுதடைந்த மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி மின்வாரியத்திற்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் கிராம மக்கள் சார்பில் கலெக்டரிடம் ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், ஜெகநாதசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story