கலெக்டர் கார்மேகம் தேசியக்கொடி ஏற்றினார்
சேலத்தில் சுதந்திர தினவிழாவில் கலெக்டர் கார்மேகம் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். 47 பேருக்கு ரூ.50 லட்சத்து 45 ஆயிரம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சுதந்திர தினவிழா
நாடு முழுவதும் சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மாவட்ட கலெக்டர் கார்மேகம் காலை 9 மணிக்கு காந்தி மைதானத்துக்கு காரில் வந்தார். அப்போது அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் வரவற்றார்.
பின்னர் காலை 9.05 மணிக்கு கலெக்டர் கார்மேகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வானில் மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
அணி வகுப்பு மரியாதை
தொடர்ந்து கலெக்டர் கார்மேகம், போலீசாரின் அணி வகுப்பை திறந்த ஜீப்பில் சென்றவாறு பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார். அவருடன் போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் சென்றார். இதையடுத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட மற்றும் மொழிப்போர் தியாகிகளின் வாரிசுதாரர்கள், எல்லை போராட்ட வீரர்களின் வாரிதாரர்கள் ஆகியோருக்கு கலெக்டர் கார்மேகம் கதர் ஆடை அணிவித்து பரிசு வழங்கினார்.
இதையடுத்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 94 போலீசார் உள்பட 305 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கலெக்டர் நற்சான்றிதழ் வழங்கினார். குறிப்பாக டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய மின்வாரிய ஊழியரை துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய தனியார் பஸ் டிரைவர் கண்ணன் மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேலாக பெண் ஓட்டுனராக எந்தவித விபத்துக்களும் ஏற்படுத்தாமல் சிறப்பாக பணியாற்றி வரும் கனரக வாகன டிரைவர் செல்வமணி ஆகியோருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகள்
மேலும், வேளாண்மை-உழவர் நலத்துறை, மகளிர் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளித்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, செம்மறி ஆடு வழங்கும் திட்டம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என பல்வேறு துறைகள் சார்பில் 47 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்து 44 ஆயிரத்து 998 மதிப்பில் மழை தூவுவான், தையல் எந்திரங்கள், கடனுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ் கலாசாரம், பண்பாடு குறித்தும், சாலை பாதுகாப்பு, இயற்கையை பாதுகாத்தலின் அவசியம் ஆகிய மைய கருத்துகளை வலியுறுத்தும் வகையில் 1,800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற கோலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
மலர்வளையம் வைத்து மரியாதை
சுதந்திர தினவிழாவில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, துணை கமிஷனர் கவுதம் கோயல், உதவி கலெக்டர் அம்பாயிரநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகநாதன், ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாம் உலகப்போரில் பங்குபெற்ற சேலம் மாவட்ட வீரர்களின் நினைவு சின்னத்துக்கு கலெக்டர் கார்மேகம் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.