38 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு


38 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு
x

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த 38 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இனிப்புகளை வழங்கி கலெக்டர் பாராட்டினார்.

பெரம்பலூர்

மாநிலத்தில் முதலிடம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி பெரம்பலூரை அடுத்த எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் பள்ளி மாணவர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை பயிற்சி தொடர்ந்து வழங்கியும், புதிய பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் என பல்வேறு தொடர் பயிற்சிகள் வழங்கியதின் காரணமாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்த வழிமுறைகளை முறையாக பின்பற்றியதின் காரணமாக பெரம்பலூர் மாவட்டம் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 97.95 சதவீதம் பெற்று மாநிலத்தில் முதலிடமும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.15 சதவீதம் பெற்று மாநில அளவில் 2-வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இதற்கு காரணமாக இருந்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு

இதனைதொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற எசனை அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 38 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் இனிப்புகளை வழங்கி பாராட்டினார்.

இந்தநிகழ்ச்சியில் பெரம்பலூர் வட்டார கல்வி அலுவலர் சண்முகம், வேப்பூர் வட்டார கல்வி அலுவலர் ஜெகநாதன், எசனை ஊராட்சி தலைவர் சத்தியா பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story