வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Oct 2023 12:15 AM IST (Updated: 23 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை நகராட்சி பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டனர்.

சிவகங்கை

வளர்ச்சி பணிகள்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், கல்லல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தேவகோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் ஆகியவைகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா, கள ஆய்வு மேற்கொண்டார்.

அதில், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், சொக்கநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட முத்தணங்கோட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையின் செயல்பாடுகள், கல்லல் ஊராட்சி ஒன்றியம், செம்பனூர் ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிட பணிகள், ஆலங்குடி-கூத்தலூர் இடையே ரூ.61.37 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மெட்டல் சாலை, தளக்காவூர் இலந்தக்கண்மாய் பகுதியில் ரூ.13.84 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூர்வாருதல் பணி மற்றும் மடை கட்டும் பணிகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டனர்.

ரேஷன் கடை

தொடர்ந்து, தேவகோட்டை நகராட்சி பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகள், தேவகோட்டை காடேரி அம்பாள் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய பூங்கா அமைத்தல் பணி, என்.ஜி.ஓ. காலனி பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் தொடர்பாகவும் ஆய்வு செய்தனர்.

காட்டூரணியில் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் தொடர்பாகவும், ராம்நகர் பகுதியிலுள்ள ரேஷன் கடையின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும் நேரில் பார்வையிட்டனர்.

ரூ.259.21 லட்சம்

தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மை துறையின் சார்பில் மானம்புவயல் தரிசு நில தொகுப்பின்படி வேளாண் காடுகள் மரம் வளர்ப்பு திட்டம் தொடர்பாகவும், மரக்கன்றுகள் நடும் பணிகள் குறித்தும் என பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.259.21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டனர்.

ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சிவராமன், இணை இயக்குனர் (வேளாண்மை) தனபாலன், துணை இயக்குனர் (வேளாண்மை) பன்னீர்செல்வம், தேவகோட்டை நகர் மன்றத்தலைவர் சுந்தரலிங்கம், தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் பார்கவி, மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், வட்டாட்சியர் உள்பட ஏராளமான அலுவலர்கள் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story