ஒற்றை சாளர முறையில் அனுமதி பெற இணையதளம்-கலெக்டர் தகவல்
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒற்றை சாளர முறையில் அனுமதி பெறும் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என கலெக்டர் கூறினார்.
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒற்றை சாளர முறையில் அனுமதி பெறும் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என கலெக்டர் கூறினார்.
கருத்தரங்கம்
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், ஒற்றை சாளர முறையில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் விரைவாக உரிமம் மற்றும் அனுமதி பெறும் இணையதளம் குறித்தும், வழிமுறைகள் குறித்த கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. தொழில் மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ்பச்சாவ் முன்னிலை வகித்தார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன் வரவேற்று பேசினார்
கருத்தரங்கில் கலெக்டர் பேசியதாவது:- வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கான முன்னெடுப்புகள் ஆகியன தொடர்பாகவும், அதற்கான அரசின் திட்டங்கள் குறித்தும், புதிய தொழில் தொடங்குவதற்கு பல்வேறு துறைகள் ரீதியாக பெறப்படும் தடையின்மைச்சான்று, உரிய அனுமதி ஆகியவைகள் குறித்தும், அதற்கான உரிய வழிமுறைகளை எளிதாக பெறுவதற்கெனவும், தமிழக அரசின் சார்பில் ஒற்றை சாளர முறை சார்ந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒற்றை சாளரமுறையில்
இதன்மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்துறைகளுக்கு ஏறத்தாழ ரூ.50.00 கோடிக்கு கீழ் தொழில் தொடங்குவதற்கும், பெரு நிறுவனங்களுக்கென ரூ.50.00 கோடிக்கு மேல் தொழில் தொடங்குவதற்கும், ஒற்றை சாளர முறையின் மூலம் எந்த தொழில் தொடங்க வேண்டும் என்பது குறித்த அனைத்துவிதமான விவரங்களை அதன்மூலம் சமர்ப்பித்து பயன்பெறலாம்.மேலும், தங்களது தொழிலுக்கு ஏற்றாற்போல் இடம் தேவைப்படுவர்களுக்கு சிட்கோ தொழிற்பேட்டை மூலமும் இடம் வசதி பெறலாம். சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி (அமராவதி புதூர்), மானாமதுரை ஆகிய பகுதிகளில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. அதில், உரிய விலையில் இடம் வழங்கப்பட்டு, அதற்கான பட்டாக்கள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒற்றை சாளர முறையின் மூலம் விண்ணப்பித்தவர்களை, மாவட்ட அளவிலான ஏற்படுத்தப்பட்டுள்ள குழுவின் மூலம் உரிய பரிசீலனை மேற்கொண்டு, உடனடியாக அதற்கான ஆணைகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இக்கருத்தரங்கில், சார்லஸ் ராஜ்குமார், கவுதம்தாஸ் பாக்கியம் மற்றும் தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.