சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி கலெக்டர் தகவல்
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக, சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தின் மயில்கேட் அருகில் உள்ள சிவகங்கை கல்வி வட்டத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, தமிழ்நாடு சீருடை பணியாளர் தோ்வாணையத்தால் நடத்தப்படும் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு தற்போது 615 பணி காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 1.7.2023-ல் குறைந்தபட்சம் 20 வயது அதிகபட்சம் பொதுப்பிரிவினருக்கு 30 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32 வயது வரையிலும், பட்டியல் மற்றும் பழங்குடியினர், திருநங்கைகளுக்கு 35 வயது வரையிலும், ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது வரையிலும், முன்னாள் படைவீரர்களுக்கு 47 வயது வரையிலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கலாம்
மேலும், இத்தேர்விற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். இத்தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in, என்ற இணையதள முகவரி வாயிலாக 1.6.2023 முதல் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.6.2023 ஆகும். தேர்விற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக இத்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் இன்று (வௌ்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் அனுபவமிக்கவா்களும், இதுபோன்ற போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களையும் கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சியின் போது பாடக்குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்படும்.
மேலும், தொடா்ச்சியான இடைவெளிகளில் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் விவரத்தினை 04575-245225 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது bit.ly/sicoaching என்ற Link -ல் பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.