தேனி அருகே உணவு பதப்படுத்தும் தொகுப்பு கட்டுமான பணி; கலெக்டர் ஆய்வு


தேனி அருகே உணவு பதப்படுத்தும் தொகுப்பு கட்டுமான பணி; கலெக்டர் ஆய்வு
x

தேனி அருகே கட்டப்பட்டு வரும் உணவு பதப்படுத்தும் தொகுப்பு கட்டுமான பணியை தேனி கலெக்டர் ஆய்வு செய்தார்.

தேனி

தேனி அருகே கேட்டூரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், ரூ.26 கோடியே 30 லட்சம் மதிப்பில் உணவு பதப்படுத்தும் தொகுப்பு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வு குறித்து கலெக்டர் முரளிதரன் கூறுகையில், "காய்கறிகள், பழங்களை நீண்ட நாட்களுக்கு கெடாமல் பாதுகாத்து நல்ல விலை கிடைக்க ஏற்பாடு செய்தல், குளிர்பதன கிட்டங்கிகளை பயன்படுத்தி காய்கறி, பழங்களை இருப்பு வைத்து பாதுகாத்தல், காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களை மதிப்புக்கூட்டி நல்ல விலைக்கு விற்பனை செய்தல், ஏற்றுமதி செய்தல் போன்ற பணிகள் இங்கு மேற்கொள்ளப்படும்.

இதற்காக இங்கு 5 ஆயிரம் டன் குளிர்பதன கிட்டங்கி, 2,500 டன் கிட்டங்கி, 80 டன் வாழை பழுக்க வைக்கும் கூடம் மற்றும் பவர் ஹவுஸ் வசதி, அலுவலகம், உணவகம், உட்புற சாலைகள், வடிகால், வாகன நிறுத்தும் இடம், கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி, எடைமேடை, சுற்றுச்சுவர் போன்றவை அமைக்கப்பட உள்ளன. இது பயன்பாட்டுக்கு வந்தால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், 20 ஆயிரம் நுகர்வோர், வியாபாரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுவர்" என்றார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வேளாண் விற்பனைக்குழு செயலாளர் ஆறுமுகராஜன், துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) பால்ராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story