250 பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரியில் 250 பள்ளி வாகனங்களை கலெக்டர் சரயு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பள்ளி வாகனங்கள் ஆய்வு
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கல்லூரி வளாகத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்யும் முகாம் நடந்தது. இதில் கலெக்டர் கே.எம்.சரயு கலந்து கொண்டு, பள்ளி வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி, பர்கூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் 45 தனியார் பள்ளிகளை சேர்ந்த 250 வாகனங்களில் பள்ளி வாகன விதிகள் 2012-ன் படி முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, அவசர வழி, ஜி.பி.ஆர்.எஸ். கருவி உள்ளிட்டவை முறையாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது.
பாதுகாப்பாக...
குழந்தைகள் வாகனங்களில் ஏறும்போது படிக்கட்டுகள், தரைதளம் சரியான அளவில் இருக்கிறதா என்பதும் அளவீடு செய்யப்பட்டது. வாகனங்களில் இருபுறமும் பள்ளிகளின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி, செல்போன் எண்கள் கட்டாயம் எழுதி இருக்க வேண்டும். பள்ளி வாகனங்களை இயக்கும் போது டிரைவர்கள், உதவியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்பாகவும் இயக்க வேண்டும்.
பள்ளி குழந்தைகளின் வாழ்வில் நேரம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, மாணவர்களை குறிப்பிட்ட நேரத்தில் பாதுகாப்பாக பள்ளியில் சேர்க்க வேண்டும். வாகனங்களை அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். அனைத்து வாகனங்களிலும் சீட் பெல்ட் கட்டாயம் இருக்க வேண்டும். ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டாரங்களில் செயல்படும் பள்ளி வாகனங்கள் விரைவில் ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செயல்விளக்கம்
இதனை தொடர்ந்து தீயணைப்புத்துறை சார்பில் வாகனத்தில் தீப்பிடித்தால் அதை அணைப்பது பற்றியும், 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் சார்பில் முதலுதவி சிகிச்சைகள் மேற்கொள்வது குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பள்ளி வாகன டிரைவர்களுக்கு கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடந்தது.
இதில் உதவி கலெக்டர் பாபு, துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அன்புசெழியன், ஆனந்தன், மாவட்ட கல்வி அலுவலர் முனிமாதன், தாசில்தார் சம்பத், தீயணைப்புத்துறை ஆய்வாளர் மகாலிங்கமூர்த்தி, 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.