பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் கலெக்டர் ஆய்வு


பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
x

விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பணியை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் காகுப்பத்தில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மின் மோட்டார்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால் அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற ரூ.45 லட்சம் மதிப்பில் 19 புதிய மின் மோட்டார்கள் கொள்முதல் செய்யப்பட்டு அங்குள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முழுவதும் சீரமைக்கப்பட்டது. இந்த சீரமைப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

இப்பணியை மாவட்ட கலெக்டர் மோகன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கழிவுநீர் சரியான சுழற்சி முறையில் சுத்திகரிக்கப்படுகிறதா என பார்வையிட்ட அவர், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் தன்மையையும் ஆய்வு செய்தார்.

அறிவுரை

மேலும் நாள்தோறும் நகராட்சி பகுதியில் இருந்து வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு மையம் மூலமாக முழுமையாக சுத்திகரித்து பின்னர் அந்த கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். இதனால் எவ்வகையிலும் பொதுமக்களுக்கோ, கால்நடைகளுக்கோ மற்றும் விளைநிலங்களுக்கோ தீங்கு ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்வதுடன் சுத்திகரிப்பு மையம் சரியாக இயங்குவதை உறுதி செய்துகொள்வதுடன் அவ்வப்போது எந்திரங்களை பராமரிக்கும் பணிகளையும் பொறியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் சுத்திகரிப்பு பணிகளில் தொய்வு ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்ள வேண்டும். என நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, பொறியாளர் ஜோதிமணி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story