வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
ஊசூரில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
ஊசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.27 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பள்ளியில் இருந்த பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரிகண்ணன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மற்ற அரசு பள்ளிகளில் இருப்பது போல் இந்த பள்ளிக்கும் ஸ்மார்ட் வகுப்பறை கட்டிட வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதனைத்தொடர்ந்து தெள்ளூர் ஊராட்சி, வீராரெட்டிபாளையத்தில் ரூ.3½ லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது தாசில்தார் வேண்டா, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட்ரமேஷ்பாபு, சரவணன், ஊசூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரிகண்ணன், தெள்ளூர் ஊராட்சி தலைவர் தேவிசுரேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.