ரூ.1¼ கோடியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
வாலாஜா ஒன்றியத்தில் ரூ.1¼ கோடியில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.1¼ கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். சின்ன தகரக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவ- மாணவிகளின் கற்றல் மற்றும் வாசித்தல் திறனை கேட்டறிந்தார். மேலும் ஊராட்சி மன்ற பொது நிதியில் புனரமைக்கப்பட்டுள்ள சமையலறை, நமக்கு நாமே திட்டத்தின் கட்டப்பட்டு வரும் புதிய துணை சுகாதார நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சீரமைக்கப்பட்டுள்ள சமையற் கூடம், ஆசிரியர்களுக்கான கழிவறை, புதியதாக கட்டப்பட்டு வரும் ரேஷன் கடை, நெற்களம், அங்கன்வாடி மையம் ஆகியவற்றையும் பர்வையிட்டார்.
10 நாட்களுக்குள்...
அதேபோன்று ஊராட்சியில் வரி வசூல் பதிவேடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அறிக்கை பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும், குடியிருப்புகளுக்கு ஏற்றவாறு வரிவசூல் முறையாக செய்யாதது குறித்தும் ஊராட்சி செயலரிடம் விளக்கம் கேட்டு, பணிகளை சரியான முறையில் மேற்கொள்ள அறிவுறுத்தினார். நிலுவையில் உள்ள பணிகளை 10 நாட்களுக்குள் விரைந்து முடிக்க ஊராட்சி மன்ற தலைவருக்கு உத்தரவிட்டார்.
மோட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சீரமைக்கப்பட்டுள்ள சமையற்கூடம், சிமெண்டு சாலை பணி, படியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட எடையந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சுமைதாங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையற் கூடங்கள், கடப்பேரி ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி கட்டிட பணி ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, சிவப்பிரகாசம். ஒன்றிய பொறியாளர் முனுசாமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.