மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கலெக்டர் ஆய்வு
செருதியூர் கிராமத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செருதியூர் கிராமத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அறுவடை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் பெய்துவரும் மழையினால் அறுவடை நிலையில் உள்ள நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே செருதியூர் கிராமத்தில் அறுவடை பருவத்தில் உள்ள ஆடுதுறை-36 ரக நெல் வயல்களை கலெக்டர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, அறுவடைக்கு தயாராக உள்ள நெல் வயல்களின் விபரம், மழைநீரை விரைவாக வடிய செய்வதற்கான வழிமுறைகள் குறித்து கிராம விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
விவசாயிகள் கோரிக்கை
மேலும், அறுவடை செய்யும் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்று நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நல்லத்துக்குடி கிராமத்தில் உடனடியாக திறக்குமாறு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன், வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், விவசாயிகள் உடன் இருந்தனர்.
வளர்ச்சி பணிகள்
தொடர்ந்து செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார். அதன்படி கஞ்சாநகரம் ஊராட்சியில் ரூ.25 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் சாலையோர தடுப்புச்சுவர் அமைக்கும் பணி,
மேலையூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேலையூர் ஊராட்சியில் பட்டன்குளம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருவதையும், ரூ.4 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு மேற்கொண்டார்.
விண்ணப்பப்பதிவு முகாம்
கீழையூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளதையும், கீழையூர் செல்லகோயில் சாலை ரூ.96 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டு பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார்.
மேலும் பணிகளை தரமானதாக மேற்கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து, கீழையூர் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருவதையும் அவர் ஆய்வு செய்தார். ஆய்வில் செம்பனார்கோவில் ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.