நீர் வளத்துறை திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


நீர் வளத்துறை திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 1 Jun 2023 12:15 AM IST (Updated: 1 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் பகுதியில் நீர் வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர்

காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியில் 55 பணிகள், ரூ.100 கோடி மதிப்பீட்டில் 768.30 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வார ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முழுமை பெறும் போது, 78 ஆயிரத்து 451 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் அடையும்.

இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் சிதம்பரம் பள்ளிப்படை கிராமத்தில் மீதிக்குடி வாய்க்கால் 21.21 கி.மீ. நீளத்திற்கு ரூ.20 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வேளக்குடி கிராமத்தில் கவரப்பட்டு வாய்க்கால் 9 கி.மீ. நீளத்திற்கு ரூ.20 லட்சம் செலவில் தூர்வாரும் பணி, காட்டுமன்னார்கோவில் வட்டம், கோப்பாடி கிராமத்தில் பழைய கொள்ளிடம் 3.20 கி.மீ. நீளத்திற்கு ரூ.24 லட்சத்து 60 ஆயிரம் செலவில் தூர்வாரும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

கீழவன்னியூர் கிராமத்தில் வெள்ளியங்கால் ஓடையில் 2.50 கி.மீ. நீளத்திற்கு ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டு விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், விவசாயிகளுடன் கலந்துரையாடி பணிகள் முன்னேற்றம் குறித்து அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் அலகின்) மூலம் சிதம்பரம் வட்டம், சிதம்பரம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் அம்மாபேட்டை பகுதியில் நபார்டு நிதி உதவியுடன் ரூ.4 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் பாலப்பணி முடிவுற்று, அணுகு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் குமார், ஞானசேகரன் மற்றும் உதவி பொறியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story