கடலூர் மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் பணியை கலெக்டர் ஆய்வு


கடலூர் மாநகராட்சி பள்ளிகளில்       காலை உணவு வழங்கும் பணியை கலெக்டர் ஆய்வு
x

கடலூர் மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் பணியை கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர்

கலெக்டர் ஆய்வு

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட வன்னியர்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் தேவனாம்பட்டினம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த காலை உணவு வழங்கும் பணியை நேற்று மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு சரியான நேரத்தில் காலை உணவு வழங்கப்படுகிறதா? உணவு தரமாக உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார்.

68, 333 மாணவ-மாணவிகள் பயன்

அதையடுத்து மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கூறுகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான காலை உணவு வழங்கும் திட்டம் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 68 ஆயிரத்து 333 மாணவ -மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி சுகாதாரமான முறையிலும், சுவையாகவும் சமைத்து குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிகளில் காலை உணவை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.


Next Story