ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் கலெக்டர் ஆய்வு


ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் கலெக்டர் ஆய்வு
x

ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர்

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை, தெப்பத்திருவிழா ஆண்டுத்தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருக பெருமானுக்கு மலர் காவடிகள் எடுத்தும், தலைமுடி காணிக்கை செலுத்தியும் பக்தியுடன் வழிபடுவார்கள்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடிகிருத்திகை விழாவுக்கு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லாததால் முருகபெருமானுக்கு சிறப்பு பூஜை மற்றும் தெப்போற்சவம் கோவில் இணையதளம் மற்றும் யூடியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஆடி கிருத்திகை திருவிழா அடுத்த மாதம் 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 21-ந் தேதி அஸ்வினி விழாவும், 22-ந் தேதி பரணி திருவிழாவும், 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது.

ஆடி கிருத்திகை விழாவில் கலந்து கொள்ளூம் பக்தர்களுக்கு செய்யவேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று முருகன் கோவிலில் ஆய்வு செய்தார். பின்னர் தெப்பத்திருவிழா நடைபெறவுள்ள சரவணப்பொய்கை திருக்குளத்தை ஆய்வு செய்தார். ஆடி கிருத்திகை விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்வது, சிறப்பு தரிசன ஏற்பாடுகள் மற்றும் தகவல் நிலையம் அமைத்து தருவது, குடிநீர், குளியலறை, கழிப்பறை வசதி, கண்காணிப்பு கேமரா, தீயணைப்பு வசதிகள், மின் இணைப்பு மற்றும் சுகாதார ஏற்பாடுகள் செய்து தருவது, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவைகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உரிய ஆலோசனைகள் வழங்கி தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது திருத்தணி ஆர்.டி.ஓ. ஹசத்பேகம், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத், முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா, வேலூர் மண்டல நகைகள் சரிபார்ப்பு துணை ஆணையர் ரமணி, இந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் சித்ரா தேவி, ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story