செட்டிமாங்குறிச்சி ஊராட்சியில் மக்கள் சந்திப்பு முகாமில் 112 பேருக்கு நலத்திட்ட உதவி-கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
செட்டிமாங்குறிச்சி ஊராட்சியில் நடந்த மக்கள் சந்திப்பு முகாமில் 112 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
எடப்பாடி:
மக்கள் சந்திப்பு முகாம்
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா செட்டிமாங்குறிச்சி ஊராட்சியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் செட்டிமாங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட 32 கிராமங்களுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்து மனு பெற்றனர்.
அனைத்து வசதிகள்
முகாமில் கலெக்டர் கார்மேகம் பேசுகையில், செட்டிமாங்குறிச்சி ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் மூலம் சாலை வசதிகள், மின் இணைப்புகள், பள்ளி வசதிகள், விவசாயம் சார்ந்த மானியங்கள், குடிநீர், தெருவிளக்கு வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் செட்டிமாங்குறிச்சி ஊராட்சி 2024-25-ம் ஆண்டு சேர உள்ளது. இதன்மூலம் செட்டிமாங்குறிச்சி ஊராட்சியின் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன என்றார்.
நலத்திட்ட உதவி
முகாமில் பல்வேறு துறைகளின் மூலம் 112 பேருக்கு ரூ.19 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை, கோட்டாச்சியர் லோகநாயகி, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் மயில், வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், எடப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.