வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு கலெக்டர் மோகன் பங்கேற்பு


வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு கலெக்டர் மோகன் பங்கேற்பு
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 1 Feb 2023 6:45 PM GMT)

வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை கலெக்டர் மோகன் திறந்து வைத்தார்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருேக வீடுர் கிராமத்தில் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட வீடூர் அணை உள்ளது. 32 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை, கடந்த 14-ந்தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து நடைபெற்ற அணையின் ஆயக்கட்டுக்காரர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் அணையின் நீர் இருப்புக்கு ஏற்றவாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் முதல்-அமைச்சருக்கு கோாிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில் நேற்று வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி, வீடுர் அணையில் இருந்து பாசனத்திற்காக தலைமை மதகு வழியாக தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் பாசன வாய்க்காலில் சென்ற தண்ணீரை மலர் துாவி வரவேற்றார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாசன வசதி

வீடூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரன் மூலம் சிறுவை, வீடூர், பொம்பூர், பொன்னம்பூண்டி, கோரைக்கேணி, ஐவேலி, நெமிலி, எறையூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 2,200 ஏக்கர் விவசாய நிலமும், புதுச்சேரி மாநிலத்தில் 1,000 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறும். இன்று(நேற்று) முதல் வரும் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை மொத்தம் 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்திரவிடப்பட்டுள்ளது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நிறைவான மகசூல் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனா, உதவி செயற்பொறியாளர் ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் மாசிலாமணி, சேதுநாதன், மயிலம் ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், செழியன், வீடூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் சுந்தரி தமிழரசன், இளைஞரணி ராமமூர்த்தி மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story