சர்பத், பதநீர் விற்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும்-கலெக்டர் அறிவிப்பு


சர்பத், பதநீர் விற்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும்-கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாலையோரங்களில் சர்பத், பதநீர் விற்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் என கலெக்டர் அறிவித்து உள்ளார்.

சிவகங்கை


சாலையோரங்களில் சர்பத், பதநீர் விற்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் என கலெக்டர் அறிவித்து உள்ளார்.

திரவ உணவு பொருள்

இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தற்போது கோடைகாலம் தொடங்குவதால் பழரசம், சர்பத், கரும்பு ஜுஸ், குளிர்பானங்கள், மோர், பதநீர், இளநீர், கம்மங்கூழ் உள்ளிட்ட திரவ ஆகாரங்களின் தேவை அதிகமாகிறது. எனவே, திரவ குளிர்பானங்களைக் உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை முறைப்படி பின்பற்ற வேண்டும்.

மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய உணவு பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்படாத ரசாயனம் கலந்த திரவ உணவுப் பொருட்கள் விற்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். திரவ உணவு பொருட்களை விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்

பாதுகாப்பு உரிமம்

அதன்படி, அனைத்து உணவு வணிகர்களும் குறிப்பாக புதிய வணிகர்கள் உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை https://foscos.fssai.gov.in, என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழை பெற்ற பின்னரே, உணவு வணிகம் ஆரம்பிக்க வேண்டும். பழரசம், சர்பத், கம்மங்கூழ் போன்ற திரவ ஆகாரங்களைத் தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவும், நன்னீராகவும் இருக்க வேண்டும். மேலும், உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது என்.ஏ.பில். அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வுக்கூடங்களில் பகுப்பாய்வு செய்து, அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும். உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் பில் வைத்திருக்க வேண்டும்.

திரவ ஆகாரங்களைத் தயாரித்து, அதற்கேற்ற வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், கரும்பு ஜுஸ் உள்ளிட்ட அவ்வப்போது உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களைத் தயாரித்த பின்னர் அதிக நேரம் இருப்பு வைத்திருக்கக் கூடாது. கம்மங்கூழ் போன்ற உணவுப்பொருட்கள் கடையை மூடும் வரை விற்பனையாகாமல் மீதமானால், அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும். ஐஸ்கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா? என்பதை உரிமையாளர் கவனிக்க வேண்டும்.

புகார் தெரிவிக்கலாம்

பொட்டலமிடப்பட்ட திரவ ஆகாரங்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி, காலாவதி நாள் உள்ளிட்ட அனைத்து லேபிள் விவரங்களும் உள்ளதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும். நுகர்வோர் வாங்கும் திரவ உணவுப்பொருட்களின் தரத்தில் குறைபாடோ அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதார குறைபாடோ காணப்பட்டால், உணவு பாதுகாப்பு அலுவலகத்திலோ அல்லது 94440 42322 என்ற வாட்ஸ்அப் சேவை எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்


Next Story