ஒப்பந்த பணியாளரின் அறுவை சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் ஏற்பாடு செய்து வழங்கிய பெரம்பலூர் கலெக்டர்


ஒப்பந்த பணியாளரின் அறுவை சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் ஏற்பாடு செய்து வழங்கிய பெரம்பலூர் கலெக்டர்
x

ஒப்பந்த பணியாளரின் அறுவை சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் ஏற்பாடு செய்து பெரம்பலூர் கலெக்டர் வழங்கினார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 42). இவர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் கணினி பிரிவில் உதவி புரோகிராமராக (ஒப்பந்த பணியாளர்) பணிபுரிந்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜேந்திரனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜேந்திரனின் இதய குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பதாகவும், அதனை அறுவை சிகிச்சை செய்து நீக்க சுமார் ரூ.5 லட்சம் வரை செலவாகும், என்றும் கூறினர்.

ஆனால் அறுவை சிகிச்சைக்கு பணமின்றி தவித்த ராஜேந்திரனுக்கு பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ரூ.1 லட்சமும், ராஜேந்திரனை போல் பணிபுரியும் கணினி உதவி புரோகிராமர்கள் மற்றும் நண்பர்கள் மொத்தம் ரூ.75 ஆயிரமும் ஏற்பாடு செய்து வழங்கினர். ராஜேந்திரனின் சூழ்நிலையை வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து கலெக்டர் கற்பகம் மனிதாபிமான அடிப்படையில் ரூ.3 லட்சம் ஏற்பாடு செய்து ராஜேந்திரனின் அறுவை சிகிச்சைக்காக, அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். இதையடுத்து ராஜேந்திரனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இதய அடைப்புகள் சரி செய்யப்பட்டது. பின்னர் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இதுகுறித்து ராஜேந்திரன் கூறுகையில், எனக்கு மறுவாழ்வு அளித்த கலெக்டர் கற்பகம், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், சக ஊழியர்கள், நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன், என்றார்.


Next Story