அரசு நிதியை பெற்றுக்கொண்டு வீடு கட்டாத பயனாளிகள் மீது நடவடிக்கை கலெக்டர் உத்தரவு
வீடு கட்டும் திட்டத்தில் அரசு நிதிைய பெற்றுக்கொண்டு பயனாளிகள் வீடு கட்டாமல் இருந்தால் அவர்கள் மீது போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கீழ்பென்னாத்தூர்,
வீடு கட்டும் திட்டத்தில் அரசு நிதிைய பெற்றுக்கொண்டு பயனாளிகள் வீடு கட்டாமல் இருந்தால் அவர்கள் மீது போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திட்டப்பணிகள் ஆய்வு
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் உள்ள 45 கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடைபெற்று வரும் அனைத்து திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது.
அனைத்து திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியபோது கலெக்டர் பேசியதாவது:-
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 2016-22ம் ஆண்டு வரை மொத்தம் 2 ஆயிரத்து 529 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்காக ரூ45 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
இதில் தற்போது வரை 1032 வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த வீடுகளை வருகிற 10-ந்தேதிக்குள் விரைந்து கட்டி முடிக்க வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு வீடுகளைக் கட்டாமல் உள்ள பயனாளிகள் மீது போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி மன்றதலைவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ஆய்வு கூட்டத்திற்கு வந்த கலெக்டருக்கு மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சிஆறுமுகம், ஒன்றியகுழுத் தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
அலுவலர்கள்
ஆய்வு கூட்டத்தில், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி, உதவி செயற்பொறியாளர் பூங்கொடி, உதவி திட்ட அலுவலர்கள் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) இமயவர்மன், உமாலட்சுமி, நாகேஷ் (உள்கட்டமைப்பு), தாசில்தார் சக்கரை, ஒன்றிய ஆணையாளர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, ஒன்றிய பொறியாளர்கள் பிரசன்னா, ரவிச்சந்திரன், சிவகுமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், 45 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சுபாஷினி நன்றி கூறினார்.