கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்திற்கு 151 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த கலெக்டர் உத்தரவு


கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்திற்கு 151 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த கலெக்டர் உத்தரவு
x

கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்திற்கு 151 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார்.

பெரம்பலூர்

கொட்டரை நீர்த்தேக்கம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மருதையாற்றின் குறுக்கே ரூ.92.70 கோடி மதிப்பில் சுமார் 815 ஏக்கர் பரப்பளவில் 212.475 மில்லியன் கன அடி நீர் தேக்கும் வகையில் கொட்டரை நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கமானது, கொட்டரை, ஆதனூர், சாத்தனூர், கூடலூர், புஜங்காரநல்லூர், கூத்தூர், அழகிரிபாளையம், தொண்டம்பாடி, பிளிமிசை ஆகிய 9 கிராமங்கள் பயனடையும் வகையிலும், சுமார் 4 ஆயிரத்து 194 ஏக்கர் பரப்பளவில் விவசாய பாசனம் பெறும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது.

கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம் மற்றும் பாசன வாய்க்கால் அமைப்பதற்காக தேவையான நிலம் 893.39 ஏக்கர் கையகப்படுத்தும் பணிகளுக்கு ரூ.56.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 742 ஏக்கர் நிலம் எடுக்கும் பணிகள் முடிவுற்றுள்ளது.

நிலம் கையகப்படுத்தும் பணி

இந்தநிலையில் நீர்த்தேக்கத்தினை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் கற்பகம், மீதமுள்ள 151 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும் என்றும், பிரிவு வாய்க்கால், மதகுகள் அமைப்பதற்கான பணிகளை முடித்து விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீரை பயன்படுத்தும் வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

மேலும், நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள கருவேல மரங்களை 15 தினங்களுக்குள் அகற்றவும், நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள கரைகளை வலுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

விவசாயிகள் ஒத்துழைப்பு

கொட்டரை அணையிலிருந்து கால்வாய் அமைப்பதற்கான பணிகளுக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றும், அலுவலர்கள் விவசாயிகளுடன் கலந்து பேசி பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கலெக்டர் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story