கொப்பரை கொள்முதல் மையத்தில் கலெக்டர் சமீரன் திடீர் ஆய்வு


கொப்பரை கொள்முதல் மையத்தில்  கலெக்டர் சமீரன் திடீர் ஆய்வு
x

கிணத்துக்கடவு கொப்பரை கொள்முதல் மையத்தில் கோவை மவட்ட கலெக்டர் சமீரன் திடீரென்று ஆய்வு நடத்தினார்

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு கொப்பரை கொள்முதல் மையத்தில் கோவை மவட்ட கலெக்டர் சமீரன் திடீரென்று ஆய்வு நடத்தினார்.

கலெக்டர் ஆய்வு

கிணத்துக்கடவு அருகே சிங்கரம்பாளையம் பிரிவு பகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி முதல் அரசு சார்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கி உள்ளது. இங்கு விவசாயிகள் கொண்டு வரும் கொப்பரைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த கொப்பரை தேங்காய் கொள்முதல் மையத்தில் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் திடீரென்று ஆய்வு நடத்தினார். அவர், அங்கிருந்த விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

அவர்களிடம், கொப்பரை தேங்காய்களை அரசு கொள்முதல் செய்வதால் அதிக அளவு உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அப்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை துணை இயக்குனர்) தமிழ்ச்செல்வி, வேளாண் விற்பனை துறை அலுவலர் சூர்யா, வேளாண்மை உதவி அலுவலர் தமிழரசன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கொப்பரை கொள்முதல் மையம் குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு பணம்

கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 6-ந் தேதி முதல் கொப்பரை தேங்காய் கொள்முதலை தொடங்கி அரசு உத்தரவிட்டது. இங்கு கொப்பரை கொண்டு வரும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை கொடுத்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 216 கிலோ வீதம் ஒரு நாளைக்கு ஒரு விவசாயியிடம் இருந்து அதிகபட்சமாக 2500 கிலோ கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது.

கிணத்துக்கடவு மையத்தில் அரவை கொப்பரை ஒரு கிலோ ரூ.105.90-க்கும், பந்துக்கு கொப்பரை ரூ.110-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது கிணத்துக்கடவு மையத்தில் இதுவரை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 450 கிலோ கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 29லட்சத்து 67 ஆயிரத்து 455 வங்கி மூலம் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story