கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு கார்களை பொதுமக்கள் முற்றுகை


கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு கார்களை பொதுமக்கள் முற்றுகை
x

கொள்ளிடம் ஆற்றை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு கார்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி

கொள்ளிடம் ஆற்றை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு கார்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

கலெக்டர் ஆய்வு

லால்குடி அருகே கூகூர் பகுதியில் செயல்படும் அரசு மணல் குவாரியில் அரசு விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதாகவும், இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது மட்டுமின்றி கல்லணை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும், எனவே மணல் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் சண்முகம், பாரதி மோகன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடுத்தனர்.

அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கூகூர் மற்றும் கோவிலடி மணல் குவாரிகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கையினை வருகிற 16-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார், மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய் துறை அதிகாரிகள் கூகூர் மணல் குவாரிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, வழக்கு தொடுத்த மனுதாரர்கள் உடனிருந்தனர்.

முற்றுகை

பின்னர் ஆய்வு பணியை முடித்து காரில் புறப்பட்டு சென்ற கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு கார்களை கூகூர் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விதிகளை மீறி மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனிடையே கலெக்டர் இந்த ஆய்வு அறிக்கையை இன்று மாலைக்குள் மதுரை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story