திருத்தணி முருகன் கோவிலில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


திருத்தணி முருகன் கோவிலில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x

ஆடிகிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருத்தணி முருகன் கோவிலில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவள்ளூர்

திருத்தணி,

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை, தெப்பத்திருவிழா ஆண்டு்தோறும் வெகு விமரிசையாக நடை்பெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானுக்கு மலர் காவடிகள் எடுத்தும், தலைமுடி காணிக்கை செலுத்தியும் பக்தியுடன் வழிபடுவார்கள்.

இந்த ஆண்டுக்கான ஆடி கிருத்திகை திருவிழா வருகிற 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. 7-ந் தேதி அஸ்வினி விழாவும், 8-ந் தேதி பரணி விழாவும், 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் ஆடி கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழாவும் நடைபெறுகிறது.

விழாவில் கலந்து கொள்ளூம் பக்தர்களுக்கு செய்யவேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் ஆகியோர் நேற்று முருகன் மலைக்கோவில், சரவண பொய்கைகுளம், நல்லாங்குளம் உள்ளிட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் தற்காலிக பஸ்நிலையம் அமைய உள்ள மேல் திருத்தணி, அரக்கோணம் சாலை, திருத்தணி பை-பாஸ் பகுதி போன்ற இடங்களில் ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து ஆடி கிருத்திகை விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து வருவாய் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் மற்றும் தகவல் நிலையம் அமைத்து தருவது, குடிநீர், பால், குளியல் அறை, கழிவறை வசதி, கண்காணிப்பு கேமரா, தீயணைப்பு வசதிகள், மின் இணைப்பு மற்றும் சுகாதார ஏற்பாடுகள் செய்து தருவது, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவைகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கலெக்டர் ஆல்பி.ஜான் வர்கீஸ் உரிய ஆலோசனைகள் வழங்கி தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது திருத்தணி ஆர்டிஓ. தீபா, துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சிபின், தாசில்தார் மதன், நகராட்சி ஆணையர் அருள், முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா, அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


Next Story