அரசு திட்டப்பணிகள் குறித்துஏற்காடு மலைக்கிராமங்களில் கலெக்டர் ஆய்வு


அரசு திட்டப்பணிகள் குறித்துஏற்காடு மலைக்கிராமங்களில் கலெக்டர் ஆய்வு
x

அரசு திட்டப்பணிகள் குறித்து ஏற்காடு மலைக்கிராமங்களில் கலெக்டர் கார்மேகம் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

சேலம்

சேலம்,

ஏற்காட்டில் ஆய்வு

ஏற்காடு மலைக்கிராம பகுதிகளில் பொதுமக்களுக்கான அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் முழுமையாக கிடைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் ஏற்காடு தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தின் பொது இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்து மாணவ, மாணவிகளின் வருகை குறித்தும், கற்றல் செயல்பாடுகளை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

நோயாளிகளுக்கு சிகிச்சை

பின்னர் ஏற்காடு மாணவிகள் தங்கும் விடுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அங்கு மாணவிகளுக்கு உணவு தரமானதாக வழங்கப்படுகிறதா? எனவும், விடுதியில் அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கிறதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது.

இதேபோல், ஏற்காடு அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்து உயிர்காக்கும் மருந்துகள், விஷமுறிவு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்து பொருட்களை போதிய அளவு இருப்பு வைக்கவும், அங்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

மனுக்களுக்கு தீர்வு

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் நிருபர்களிடம் கூறுகையில், ஏற்காடு மலைக்கிராம மக்களுக்கு அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் முறையாக சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏற்காடு டவுன், நாகலூர், வெள்ளக்கடை, மஞ்சக்குட்டை, செம்மநத்தம், தலைச்சோலை, மாரமங்கலம் ஆகிய 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 67 குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் அதிகாரிகள் குழுவினர் குறைகளை கேட்டு அவர்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறார்கள், என்றார்.

ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வன அலுவலர் காஷ்யாப் ஷஷாங் ரவி, ஆவின் பொதுமேலாளர் விஜய்பாபு, ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா, சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டர் மயில், மாவட் சுகாதாரத்துறை இணை இயக்குனர் வளர்மதி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story