வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
x

திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் தாலுகா அலுவலகத்திற்கு கலெக்டர் மோகன் வருகை தந்தார். பின்னர் அவர் அங்கு வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு வந்த மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து ஆவணங்களை சரிபார்த்தார். தொடர்ந்து நீர், நிலை மற்றும் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், முதியோர் உதவித்தொகை வழங்குதல் ஆகிய விவரங்களை கேட்டறிந்ததோடு, அது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒவ்வொரு நாளும் பொது மக்களுக்கான திட்டங்களை உரிய காலத்தில் வழங்கிடும் வகையில் செயல்பட வேண்டும்.

தீர்வு காண வேண்டும்

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். அதேபோல் அலுவலக பதிவேடுகளை பராமரிப்பதிலும் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரகு குமார், திண்டிவனம் தாசில்தார் வசந்தகுமார் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story