கோடை விழா நடத்துவதற்காக இடம் தேர்வு செய்ய கலெக்டர் ஆய்வு
ஜவ்வாதுமலையில் கோடை விழா நடத்துவதற்கான இடம் தேர்வு செய்ய எம்.பி., எம்.எல்.ஏ.வுடன் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஜவ்வாதுமலையில் கோடை விழா நடத்துவதற்கான இடம் தேர்வு செய்ய எம்.பி., எம்.எல்.ஏ.வுடன் கலெக்டர் ஆய்வு செய்தார்.
கோடை விழா
ஜவ்வாதுமலையில் 23-வது கோடை விழாவை விமரிசையாக நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில் சுற்றுலாதுறை, ஊரக வளர்ச்சி முகமை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து அரங்குகள் அமைப்பதற்கான இடங்களை இன்று கலெக்டர் முருகேஷ் தலைமையில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., பெ.சு.தி. சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் தேர்வு செய்ய ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை தரும் விதமாக அவர்கள் அமர கூடிய இருக்கை வசதிகள், கோடை விழாவிற்கு வருகை புரியும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கழிவறை வசதிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் நிறுத்துவதற்காக பஸ் நிறுத்துமிடம், கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரவும்,
கோவிலூர் ஊராட்சியில் உள்ள முருகன் கோவில் அருகிலும், ஜமுனமரத்தூர் தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள இடத்தினையும் மற்றும் அத்திப்பட்டில் உள்ள தனியார் பள்ளி மைதானத்திலும் கோடை விழா நடத்துவதற்காக இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சுற்றுலா மாளிகை
மேலும் ஜமுனமரத்தூரில் ரூ.2 கோடியே 99 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய கூடுதல் சுற்றுலா மாளிகையினையும் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர் பஸ் நிலையத்தினை தூய்மையாக வைத்து கொள்ளவும், பஸ் நிலையம் அருகில் உள்ள சுகாதார நிலையத்தையும் நேரில் சென்று பார்வையிட்டு தூய்மையாக வைத்து கொள்ள அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது ஆரணி உதவி கலெக்டர் தனலட்சுமி, ஜமுனமரத்தூர் ஒன்றியக்குழு தலைவர் ஜீவாமூர்த்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.