கலெக்டர் வளர்மதி தேசிய கொடி ஏற்றினார்
ராணிப்பேட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் வளர்மதி தேசிய கொடி ஏற்றிவைத்து, ரூ.61¼ லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கொடி ஏற்றினார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதியுடன் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.
பின்னர் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நலத்திட்ட உதவி
இதனைத் தொடர்ந்து வேளாண்மை, வேளாண் பொறியியல், வேளான் விற்பனை மற்றும் வணிகத்துறை, தோட்டக்கலை, உழவர் பாதுகாப்பு திட்டம், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட துறைகளின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.61 லட்சத்து 35 ஆயிரத்து 480 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
மேலும் வருவாய்த்துறை, காவல்துறை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள் 198 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கலை நிகழ்ச்சி
தொடர்ந்து சுதந்திர போராட்ட வீரர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பேச்சு போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி, ஓவியம், நடனம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏராளமான பொதுமக்கள் கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கு தனித்துணை கலெக்டர் ஸ்ரீவள்ளி நேரடியாக சென்று அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, திட்ட இயக்குனர் (பொது) ரவிச்சந்திரன், சப்-கலெக்டர்கள் வினோத்குமார், பாத்திமா உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.