சினிமா தியேட்டர்களில் லியோ திரைப்படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்ட சினிமா தியேட்டர்களில் லியோ திரைப்படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கூடுதல் சிறப்புக்காட்சி
தமிழ்நாட்டில் உள்ள சினிமா தியேட்டர்களில் "லியோ" திரைப்படத்திற்கு கூடுதலாக ஒரு சிறப்புக்காட்சி 19.10.2023 (இன்று) முதல் 24.10.2023 வரை (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) நடத்த தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் "லியோ" திரைப்படத்திற்கான ஒரு சிறப்புக்காட்சியை இன்று (வியாழக்கிழமை) முதல் 24-ந் தேதி வரை (அதாவது ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) தொடக்க காட்சி காலை 9 மணிக்கும், கடைசி காட்சியாக நள்ளிரவு 1.30 மணியளவில் முடிவடையும் வகையில் திரையிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்புக்குழு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள நுழைவு கட்டணங்களைவிட கூடுதலாக வசூலிக்கப்படுவதை கண்காணித்திடவும், அவ்வாறு கூடுதலாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டால் தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள கோட்ட அளவிலான கண்காணிப்புக்குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கீழ்கண்ட செல்போன் எண்ணிற்கு புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. புகாரை பெற்று தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
விழுப்புரம் கோட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலர்களாக விழுப்புரம் கோட்டாட்சியர், விழுப்புரம், செஞ்சி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி ஆணையர் (மாநில வரி) விழுப்புரம்-1, விழுப்புரம்- 2 ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவை 9445000424 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். அதுபோல் திண்டிவனம் கோட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களான திண்டிவனம் சப்-கலெக்டர், திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு, செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு, திண்டிவனம், செஞ்சி வணிக வரி அலுவலர்கள் ஆகியோரை 9445000423 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
விதிமுறைகள்
தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதிகளின்படி 14A படிவம் "சி" உரிமத்தை நிபந்தனையின்படி புதிய திரைப்படம் வெளியிடும் நிகழ்ச்சியின்போது, முறையான போக்குவரத்து மற்றும் பார்க்கிங் ஏற்பாடுகளை உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் அதிக பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்தல் மற்றும் விதிமீறல்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்களில் கூடுதல் காட்சி நடத்தப்படும் நேர்வில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்டநெரிசல் ஏதும் ஏற்படாதவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
திரைப்படம் காண்போரின் வாகனங்கள் உள்வருதல், வெளியேறுதல், வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், காவல்துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும்.
மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும், இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும். தியேட்டர்களை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.
கடும் நடவடிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கிவரும் தியேட்டர்களின் உரிமையாளர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது. விதிமீறல்கள் காணப்படின் தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) சட்ட விதிகளின்படி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.