குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்57 பயனாளிகளுக்கு ரூ.19¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்கலெக்டர் சாந்தி வழங்கினார்


குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்57 பயனாளிகளுக்கு ரூ.19¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்கலெக்டர் சாந்தி வழங்கினார்
x
தினத்தந்தி 17 April 2023 7:00 PM GMT (Updated: 17 April 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 57 பயனாளிகளுக்கு ரூ.19.75 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதிய தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 332 மனுக்கள் வரப்பெற்றன.

இந்த மனுக்களை பெற்றுகொண்ட கலெக்டர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 54 பெண்களுக்கு ரூ.9.50 லட்சம் மதிப்பில் சிறு தொழில் செய்ய உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார். மேலும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற ஒரு பயனாளிக்கு ரூ.25 ஆயிரத்தில் புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியத்தொகை, கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவுபெற்று பணியின்போது விபத்து ஏற்பட்டு மரணமடைந்த 2 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகைகள் பெறுவதற்கான ஆணைகள் என மொத்தம் 57 பயனாளிகளுக்கு ரூ.19.75 லட்சத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

இதில் உதவி கலெக்டர் கீதாராணி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், தொழிலாளர் உதவி ஆணையர் முத்து, பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கண்ணன் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story